சுடச்சுட

  

  22-ஆவது நாளைக் கடந்தது அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம்: அமெரிக்க வரலாற்றில் முதல் முறை

  By  வாஷிங்டன்,  |   Published on : 13th January 2019 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  america

  அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் 22-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிக நாள்களுக்கு நீடித்த அரசுத் துறைகள் முடக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
   மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 570 கோடி டாலர் (சுமார் ரூ.45,125 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
   எனினும், ஜனநாயகக் கட்சியினர் அதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
   இதன் காரணமாக, முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால், அந்தத் துறைகள் கடந்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன.
   இந்த நிலையில், இதுதொடர்பாக ஆளும் குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினருக்கும் வெள்ளிக்கிழமையும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
   அதையடுத்து, அரசுத் துறைகள் 22-ஆவது நாளாக சனிக்கிழமையும் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
   அமெரிக்க வரலாற்றில் அரசுத் துறைகள் இத்தனை நாள்களுக்கு நீடித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
   ஏற்கெனவே, பில் கிளிண்டனின் ஆட்சிக் காலத்தின்போது, கடந்த 1995-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 1996-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை 21 நாள்களுக்கு அரசுத் துறைகள் முடக்கப்பட்டிருந்தன.
   அதுதான், அமெரிக்காவின் மிக நீண்ட கால அரசுத் துறை முடக்கமாக இருந்து வந்தது. இந்தச் சூழலில், தற்போது நீடித்து வரும் அரசுத் துறைகள் முடக்கம் 22-ஆவது நாளைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
   மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லை நெடுகிலும் சுவர் எழுப்ப அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
   எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரோ, அவ்வாறு சுவர் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பினரும் தங்களது இந்த நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வர மறுப்பதால், அரசின் பல்வேறு துறைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யும் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
   இதன் காரணமாக, அரசின் முக்கியத் துறைகள் கடந்த மாதம் 22-ஆம் தேதியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன.
   அரசுத் துறை முடக்கப்பட்டுள்ளதன் விளைவாக, 8 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
   அவர்கள் ஊதியமில்லாமல் பணியாற்றவோ, அல்லது கட்டாய விடுப்பில் செல்லவோ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
   இந்தச் சூழலில், மெக்ஸிகோ எல்லைச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு செய்தால்தான் அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவை ஏற்போம் என்றும் அதிபர் டிரம்ப்பும், அந்தச் சுவருக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் அந்த மசோதாவை ஏற்க மாட்டோம் என்று குடியரசுக் கட்சியினரும் வெள்ளிக்கிழமையும் பிடிவாதமாகத் தெரிவித்துவிட்டனர்.
   இதன் காரணமாக, அரசுத் துறைகள் முடக்கம் வரலாற்று உச்சத்தைக் கடந்து 22-ஆவது நாளை அடைந்துள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai