பிரான்ஸில் 9-ஆவது வாரமாக "மஞ்சள் அங்கி' போராட்டம்

பிரான்ஸில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், 9-ஆவது வாரமாக சனிக்கிழமையும் நடைபெற்றது
பிரான்ஸில் 9-ஆவது வாரமாக "மஞ்சள் அங்கி' போராட்டம்

பிரான்ஸில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் "மஞ்சள் அங்கி' போராட்டம், 9-ஆவது வாரமாக சனிக்கிழமையும் நடைபெற்றது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கிப் போராட்டம், 9-ஆவது வாரமாக சனிக்கிழமையும் நடைபெற்றது. போராட்டத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் பாரீஸிலுள்ள நிதியமைச்சகம் எதிரே ஆயிரக்கணக்கானோர் கூடி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அங்கிருந்து, அதிபர் மாளிகைக்கு அவர்கள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
 பாரீஸ் தவிர, மாகாணத் தலைநகரங்கள் உள்ளிடட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் அங்கிப் போராட்டம் நடைபெற்றது.
 போராட்டத்தின்போது வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக, நாடு முழுவதும் 80,000 பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 காற்று மாசைக் குறைத்து, பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்து வந்தது.
 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
 எரிபொருள் விலையேற்றம் மட்டுமன்றி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 எதிர்ப்பின் அடையாளமாக, ஒளிரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், "மஞ்சள் அங்கி' போராட்டம் என்றழைக்கப்படுகிறது.
 வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், தொடர்ந்து தீவிரமடைந்தது.
 அதையடுத்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு சலுகைத் திட்டங்களை அதிபர் இமானுவல் மேக்ரன் அறிவித்தார்.
 வரிகளை பெருமளவு குறைப்பது, குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோக்கள் (சுமார் ரூ.8,200) அதிகரிப்பது போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிவித்தார்.
 அதையடுத்து, மஞ்சள் அங்கிப் போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்திருந்தாலும், தற்போது 9-ஆவது வாரமாக அந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com