சபரிமலை விவகாரத்தை கேரள மக்களின் முடிவுக்கே விட வேண்டும்

சபரிமலை விவகாரத்தை கேரள மக்களின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சபரிமலை விவகாரத்தை கேரள மக்களின் முடிவுக்கே விட வேண்டும்

சபரிமலை விவகாரத்தை கேரள மக்களின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
 துபையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினருடன் சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசினேன். அவர்கள் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்தனர். முன்பிருந்ததைவிட கேரளத்தில் தற்போது நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது என்பதை அதன்மூலம் உணர்ந்து கொண்டேன்.
 சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை அந்த மாநில மக்களே முடிவு செய்யட்டும்.
 முன்பு, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். பாரம்பரியமும் காக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் தற்போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சபரிமலை விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாத நிலைமையில் இருக்கிறேன் என்றார் ராகுல்.
 சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அதை ராகுல் காந்தி வரவேற்றிருந்தார். அதே சமயத்தில் அந்தத் தீர்ப்பை, கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் விமர்சித்திருந்தனர்.
 சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
 பெண்ணியவாதிகள் சிலர் சபரிமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய முயற்சி செய்த போதிலும், பக்தர்களின் எதிர்ப்பால், அவர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினர்.
 இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்ட அடுத்த சில தினங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கேரளத்தைச் சேர்ந்த 2 பெண்கள் சந்நிதானத்துக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com