துருக்கி கட்டுப்பாட்டில் அமைதி மண்டலம்: சிரியா குர்துகள் நிராகரிப்பு

சிரியா - துருக்கி எல்லைப் பகுதியில், துருக்கி கட்டுப்பாட்டில் அமைதி மண்டலத்தை ஏற்படுவது குறித்த அமெரிக்காவின்
சிரியாவில் குர்துகள் கட்டுப்பாட்டு எல்லையையொட்டியதால் ஹஜார் நகரில் போர்ப் பயிற்சி மேற்கொண்டு வரும் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள்.
சிரியாவில் குர்துகள் கட்டுப்பாட்டு எல்லையையொட்டியதால் ஹஜார் நகரில் போர்ப் பயிற்சி மேற்கொண்டு வரும் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள்.


சிரியா - துருக்கி எல்லைப் பகுதியில், துருக்கி கட்டுப்பாட்டில் அமைதி மண்டலத்தை ஏற்படுவது குறித்த அமெரிக்காவின் யோசனையை சிரியா குர்துகள் நிராகரித்தனர்.
இதுகுறித்து, குர்து படையினரின் மூத்த தலைவர் அல்தார் கலீல் புதன்கிழமை கூறியதாவது:
சிரியாவுக்கும், துருக்கிக்கும் இடையே துருக்கியின் கட்டுப்பாட்டில் அமைதி மண்டலம் அமைப்பதை ஏற்க முடியாது.
அத்தகைய அமைதி மண்டலம் ஏற்படுத்தப்படுவது துருக்கியின் இறையாண்மையை பாதிக்கும் செயலாகும்.
எல்லைப் பகுதி பாதுகாப்புக்காக வேறு எத்தகைய யோசனைகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், சிரியாவின் இறையாண்மைக்கு எதிரான எந்த யோசனையையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்றார் அவர்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பரிந்துரையை ஏற்று, சிரியா எல்லையில் அமைதி மண்டலத்தை ஏற்படுத்தப்போவதாக துருக்கி அதிபர் எர்டோகன் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை அதிகம் அறியப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினர்.
எனினும், அமெரிக்கக் கூட்டுப் படையின் உதவியுடன் சிரியாவிலுள்ள குர்து மற்றும் கிளர்ச்சிப் படையினரும், ரஷியாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த 95 சதவீத பகுதிகள் மீட்கப்பட்டன.
ஐ.எஸ்.ஸுக்கு எதிராக சிரியாவில் சண்டையிட்டு வரும் குர்துகள் மற்றும் கிளர்ச்சிப் படையினருக்கு ஆதரவாக அங்கு 2,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சிரியாவில் ஐ.எஸ்.ஸை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறிவிட்டதால், அங்கிருக்கும் வீரர்கள் அனைவரையும் திரும்ப அழைக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் அதிரடியாக அறிவித்தார்.
அதையடுத்து, அமெரிக்க வீரர்களுடன் இணைந்து ஐ.எஸ்.ஸுக்கு எதிராகப் போரிட்டு வந்த சிரியா குர்துப் படையினரின் கதி குறித்து அச்சம் எழுந்துள்ளது. அண்டை நாடான துருக்கியில், பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ள அந்த நாட்டு குர்து அமைப்பினருக்கு, சிரியா குர்துகள் ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.
அதன் காரணமாக, சிரியாவிலுள்ள குர்துப் படையினர் மீது துருக்கி ராணுவம் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்க வெளியேற்றத்துக்குப் பிறகு சிரியாவில் துருக்கி ராணுவத்தால் சிரியா படையினர் வேட்டையாடப்படுவார்கள் எனவும், இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் மேலோங்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்தச் சூழலில், துருக்கியின் கட்டுப்பாட்டில் எல்லை அமைதி மண்டலத்தை அமைக்கும் அமெரிக்க யோசனையை குர்து படையினர் தற்போது நிராகரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com