ஜன. 21-இல் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: எம்.பி.க்களிடம் தெரசா மே உறுதி

பிரிட்டன் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு மாற்றாக, புதிய ஒப்பந்த மசோதாவை வரும் 21-
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, லண்டனிலுள்ள பிரதமர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் பிரதமர் தெரசா மே.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, லண்டனிலுள்ள பிரதமர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் பிரதமர் தெரசா மே.


பிரிட்டன் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு மாற்றாக, புதிய ஒப்பந்த மசோதாவை வரும் 21-ஆம் தேதி தாக்கல் செய்வதாக எம்.பி.க்களிடம் பிரதமர் தெரசா மே உறுதியளித்துள்ளார்.
மேலும், பிரெக்ஸிட் நடவடிக்கைகளை சுமுகமாக நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கும்படி எம்.பி.க்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் அவர் மேற்கொண்ட ஒப்பந்த மசோதாவை நாடாளுமன்றம் நிராகரித்த பிறகும், அவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் அவர் எம்.பி.க்களிடம் இவ்வாறு கோரியுள்ளார்.
இதுகுறித்து லண்டனிலுள்ள பிரதமர் இல்லத்தில் செய்தியாளர்ளிடம் அவர் கூறியதாவது:
எனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) நடவடிக்கையை ஒற்றுமையுடன் செயல்படுத்துவதில் நமது கவனத்தை செலுத்துவோம்.
தற்போது ஐரோப்பிய யூனியனுடனான பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் பேசி, மாற்று பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்வேன்.
பிரிட்டனுக்கு நன்மை அளிக்கும் பிரெக்ஸிட்டையே பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, எம்.பி.க்கள் தங்கள் சொந்த நலன்களை புறம் தள்ளிவிட்டு இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் தெரசா மே.
புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில், எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய அம்சங்களில் பல நீக்கப்படலாம் அல்லது மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய வர்த்தக விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற்கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து, தெரசா மே அமைச்சரவையைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் பதவி விலகினர்.
இந்தச் சூழலில், பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் அது தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக ஆளுங்கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் வாக்களித்ததால் அவரது அரசு தப்பியது.
இந்த நிலையில், எம்.பி.க்களிடம் தெரசா மே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com