
ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து கத்தாரில் தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கன் நல்லிணக்கத்துக்கான அமெரிக்கத் தூதர் ஸல்மே கலீல்ஸாத் , தலிபான் பிரதிநிதிகளை கத்தார் தலைநகர் தோஹாவில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
அவருடன், பல்வேறு அரசு அமைப்புகளைச் சேர்ந்த குழுவினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அந்தப் பேச்சுவார்த்தை இரண்டு நாள்களாக நடைபெற்று வந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, அந்த நாட்டு அரசுடன்தான் தலிபான் பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறி வந்தது.
எனினும், ஆப்கன் அரசு என்பது அமெரிக்காவின் கைப்பாவை எனவும், எனவே அமெரிக்காவுடன்தான் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தலிபான்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், தலிபான்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.
அதன் மூலம், கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் ஆப்கன் போரில், தலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தும் விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை முதல் முறையாக மாற்றிக் கொண்டது.