அமைதிப் பேச்சுவார்த்தை: தலிபான்களுக்கு ஆப்கன் அதிபர் அழைப்பு

ஆப்கானிஸ்தான் அரசுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் முன்வர வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரசுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் முன்வர வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி அழைப்பு விடுத்துள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான்களுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் அறிவிப்பது, வெளிநாட்டுப் படைகளை திரும்பப் பெறுவதற்கான கால அட்டவணையை அறிவிப்பது, சிறைக் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, தோஹாவில் 6 நாள்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக இரு தரப்பும் கூறிய நிலையில், தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தையை வழிநடத்தி வரும் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸல்மே காலீல்ஜாத், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் வந்தார். அப்போது, பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியிடம் அவர் விளக்கினார். மேலும், ஆப்கன் அரசுடன் தலிபான்களை நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்ததாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அமெரிக்காவின் கைப்பாவைகள்தான் என்றும், அவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் தலிபான்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், காபூலில் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அஷ்ரஃப் கனி, ஆப்கானிஸ்தான் அரசுடன் ஆக்கப்பூர்வ பேச்சு நடத்துவதற்கு தலிபான்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 
அவர் மேலும் கூறியதாவது: நாங்கள் அமைதியை விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு படைகள் தொடர்ந்து இருப்பதையோ, மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகளில் தற்கொலை தாக்குதல்கள் நடைபெறுவதையோ நாங்கள் யாரும் விரும்பவில்லை.
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போரால் பாதிக்கப்படுபவர்கள் இந்நாட்டினரே. எனவே, அமைதி பேச்சுவார்த்தைக்கான நடைமுறை, ஆப்கானிஸ்தான் தலைமையில்தான் நடைபெற வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, அமெரிக்கா-தலிபான்கள் இடையே எந்த உடன்பாடு ஏற்பட்டாலும், அதற்கு ஆப்கானிஸ்தான் அரசின் ஒப்புதலை பெற வேண்டும் என்று அந்நாட்டின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com