ஹிந்துவாக இருப்பதால் என்னை விமர்சிக்கின்றனர்: துளசி கபார்ட் குற்றச்சாட்டு

ஹிந்துவாக இருக்கும் காரணத்தால், தான் விமர்சிக்கப்படுவதாக அமெரிக்காவின் ஹவாய் மாகாண எம்.பி.யும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான துளசி கபார்ட் தெரிவித்துள்ளார்.
ஹிந்துவாக இருப்பதால் என்னை விமர்சிக்கின்றனர்: துளசி கபார்ட் குற்றச்சாட்டு

ஹிந்துவாக இருக்கும் காரணத்தால், தான் விமர்சிக்கப்படுவதாக அமெரிக்காவின் ஹவாய் மாகாண எம்.பி.யும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான துளசி கபார்ட் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்த துளசி கபார்ட், பத்திரிகை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஹிந்து மதத்தைச் சேர்ந்த நான், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், என்னை "ஹிந்து தேசியவாதி' என்று விமர்சனம் செய்கின்றனர். இதுவே, வருங்காலத்தில் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் மதத்தினரோ, யூதர்களோ, ஜப்பானியர்களோ, ஆப்பிரிக்கர்களோ அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டால் அவர்களை என்னவென்று கூறுவீர்கள்?
நான் "ஹிந்து தேசியவாதி' என்பதற்கு ஆதாரமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நான் பேசியதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மோடியுடன் பேசி வருவதை விமர்சகர்கள் மறந்துவிட்டனர்.
மத வெறுப்பின் அடிப்படை: அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹிந்து உறுப்பினர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். அதேபோல், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் முதல் ஹிந்து என்பதிலும் நான் பெருமிதம் கொள்கிறேன். பத்திரிகைகளில் என்னைப் பற்றிச் செய்திகள் வெளியாவதைக் கண்டு, உலகின் மூன்றாவது பெரிய மதமான ஹிந்து மதம் குறித்து அறிந்துகொள்ள அனைவரும் விரும்புகின்றனர்.
ஆனால், சிலர் மட்டும் எனக்கு எதிராகவும், எனது ஆதரவாளர்களுக்கு எதிராகவும் தவறான கருத்துகளையும், மதக் காழ்ப்புணர்ச்சியையும் பரப்பி வருகின்றனர். "அமெரிக்காவுக்காக நீங்கள் செய்தது என்ன?' என்ற கேள்வியை ஹிந்து அல்லாதோரிடம் கேட்காமல், என்னிடம் மட்டும் கேட்பது மத வெறுப்பின் அடிப்படை என்றே தோன்றுகிறது. 
கடந்த 2012, 2014, 2016-ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், எனக்கு எதிராகப் போட்டியிட்டவர்கள், வெளிப்படையாகவே ஹிந்து மதம் குறித்து விமர்சித்துள்ளனர். மேலும், தேர்தல்களில் பங்கேற்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 
இதுபோன்ற நிகழ்வுகள், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், சிறுபான்மையினரிடையே அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. 
மதம், இனம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பிரசாரம் செய்பவர்கள் அமெரிக்கக் குடிமக்களாக இருக்கும் தகுதியை இழக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹவாய் மாகாணத்திலிருந்து துளசி கபார்ட் 4 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com