
மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கு அமெரிக்க பாதுகாப்புத் துறையின் நிதி பயன்படுத்தப்படுவதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதையடுத்து, வரும் 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குள் தடுப்புச் சுவர் எழுப்பும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையில், அந்த நாட்டு எல்லைப் பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்ப டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
எனினும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் முட்டுக்கட்டை போட்டு வந்தனர்.
அதையடுத்து, நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்வதற்காக டிரம்ப் அவசர நிலை அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக அவர் 810 கோடி டாலர் (சுமார் ரூ.55,509 கோடி) ஒதுக்கீடு செய்தார்.
அந்தத் தொகையில், ராணுவ கட்டுமானங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 2,360 கோடி டாலரும் (சுமார் ரூ.24,674 கோடி), போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து 250 கோடி டாலரும் (சுமார் ரூ.17,133 கோடி) அடங்கும்.
எனினும், அந்தத் தொகையை எல்லைச் சுவர் எழுப்புவதற்காக ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், ஏற்கெனவே கீழமை நீதிமன்றம் விதித்திருந்த தடையை சான் ஃபிரான்சிஸ்கோ நகர முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.