ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ஏவுகணைகளை வாங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: துருக்கிக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ஏவுகணைகளை வாங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: துருக்கிக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ஏவுகணைகளை  வாங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று துருக்கிக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ஏவுகணைகளை  வாங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று துருக்கிக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் துருக்கியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், எதிரி நாடுகளின் ஏவுகணைகள், விமானங்கள் உள்ளிட்டவற்றை நடுவானில்  இடைமறித்து தாக்கி அழிக்கும் எஸ்.400 ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு துருக்கி ஒப்பந்தம் செய்துள்ளது. 
துருக்கியில் எஸ்.400 ஏவுகணைகள் நிறுத்தப்பட்டால், அதிலிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலை நாடுகளின் போர் விமானங்களை ரஷியா தாக்கி அழிக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகிக்கிறது. இதனால் ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ஏவுகணைகளை துருக்கி வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஜூலை 31ஆம் தேதிக்குள் அந்த ஒப்பந்தத்தை துருக்கி ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் எப்.35 போர் விமானம் திட்டத்தில் இருந்து துருக்கி நீக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது.
இதனிடையே, ஜப்பானில் நடைபெற்ற ஜி20 அமைப்பின் உச்சிமாநாட்டின் இடையே துருக்கி அதிபர் எர்டோகனும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் சந்தித்துப் பேசினர். அப்போது அமெரிக்காவிடம் இருந்து பேட்ரியாட் ஏவுகணைகளை வாங்க துருக்கி முதலில் விருப்பம் தெரிவித்ததாகவும், இதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அனுமதிக்காததால், ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்ததாகவும் எர்டோகன் தெரிவித்தார். இதனால் டொனால்டு டிரம்ப் சமாதானம் அடைந்து விட்டதாகவும், எஸ்.400 ஏவுகணைகளை துருக்கி வாங்கினாலும் அந்நாட்டின் மீது அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "எஸ்.400 ஏவுகணைகளை துருக்கி வாங்கினால், அந்நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எப்.35 திட்டத்தில் இருந்து நீக்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும். ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை மீறினால் என்ன விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறித்து, துருக்கிக்கும் நன்கு தெரிந்திருக்கும்' என்றார்.
துருக்கி பதில்: இதனிடையே, எஸ்.400 ஏவுகணை விவகாரத்தை முன்வைத்து ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அது இரு நாடுகளிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும், ஆதலால் அத்தகைய நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டுமென்று அமெரிக்காவை துருக்கி கேட்டுக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com