பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்

தங்கள் நாட்டைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் கப்பல்கள் இடைமறித்து திசைத்திருப்ப முயன்றதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.
பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை இடைமறித்தது ஈரான்


தங்கள் நாட்டைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் கப்பல்கள் இடைமறித்து திசைத்திருப்ப முயன்றதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது.
ஜிப்ரால்டர் கடல் பகுதியில் தங்களது எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் சிறைப்பிடித்ததற்குப் பதிலடியாக, அந்த நாட்டின் கப்பலை ஈரான் சிறைப்பிடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரிட்டன் அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான முறையில், பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஹெரிடேஜ் எண்ணெய்க் கப்பலை 2 ஈரானியக் கப்பல்கள் புதன்கிழமை இடைமறித்தன.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அந்த எண்ணெய்க் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது, அதனை ஈரானியக் கப்பல்கள் இடைமறித்தன.
மேலும், பிரிட்டிஷ் ஹெரிடேஜின் பயண திசையை மாற்றவும் அந்தக் கப்பல்கள் முயன்றன.
அதையடுத்து, அந்த எண்ணெய்க் கப்பலின் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருந்த பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான ஹெச்எம்எஸ் மான்ட்ரோஸ் போர்க் கப்பல் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்தது.
அங்கு நின்றிருந்த ஈரானியக் கப்பல்களை ஹெச்எம்எஸ் மான்ட்ரோஸ் எச்சரிக்கை செய்ததையடுத்து கப்பல்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றன.
ஈரானின் இந்தச் செயல் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
வளைகுடா கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நாங்கள் தொடர்ந்து அந்த நாட்டிடம் வலியுறுத்துவோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியா மக்கள் மீது அதிபர் அல்-அஸாத் தலைமையிலான அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டி வரும் ஐரோப்பிய யூனியன், அதற்காக அந்த அரசின் மீது விதித்த பொருளாதாரத் தடை, 2011-ஆம் ஆண்டிலிருந்து அமலில் இருக்கிறது.
இந்த நிலையில், சிரியாவிலுள்ள பன்யாஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு வழங்குவதற்காக ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கிரேஸ் 1 என்ற கப்பல் கடந்த வாரம் சிறைப்பிடிக்கப்பட்டது.
பிரிட்டனின் ஆளுகைக்குள்பட்ட ஜிப்ரால்டர் பகுதியில், பிரிட்டன் கடற்படை உதவியுடன் அந்த மாகாண காவல்துறை அந்த எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்தது.
தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதால் அந்தக் கப்பலை சிறைப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு ஈரான் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறது.
ஏற்கெனவே, சர்வதேச நாடுகளுடன் ஈரான் செய்துகொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதும், அதனைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதும் இந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறைப்பிடிக்க முயற்சி செய்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com