ஜின்ஜியாங்கைப் போல் திபெத்திலும் தடுப்பு முகாம்?: சீன அரசு மறுப்பு

ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் கட்டாயமாக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களைப் போல,
ஜின்ஜியாங்கைப் போல் திபெத்திலும் தடுப்பு முகாம்?: சீன அரசு மறுப்பு


ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் சிறுபான்மையினர் கட்டாயமாக அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களைப் போல, திபெத்திலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை சீனா மறுத்துள்ளது.
திபெத்தில் ஏராளமான பெளத்த மதத்தினர் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, நாடுகடந்த திபெத் அரசின் தலைவர் லோப்சங் சங்கே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் வெள்ளிக்கிழமை கூறுகையில், திபெத்தில் பொதுமக்களுக்கான தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும்' என்றார்.
ஹன் இனத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்கர் இன முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். எனினும், அந்தப் பகுதியில் தங்களது தனித்தன்மையைப் போக்கும் வகையில் ஹன் இனத்தவர்களை குடியேற்றுவதாகவும், மத சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் உய்கர் இனத்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதற்கு எதிராக அவ்வப்போது சில தாக்குதல்களும் நடைபெற்றுள்ள நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் பல்வேறு தடுப்பு முகாம்களை அமைத்து அதில் லட்சக்கணக்கான உய்கர், கஜக் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவர்களை சீன அரசு கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனினும், அந்த மாகாணத்தில் பிரிவினைவாதத்துக்கும், மத தீவிரவாதத்துக்கும் எதிராக தாங்கள் போராடி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே, மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அவர்களுக்கு முகாம்களில் சீர்திருத்த வகுப்புகள் நடத்துவதாகவும் சீனா கூறி வருகிறது.
இந்தச் சூழலில், திபெத்திலும் அதே போன்ற தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருவதாக வெளியான தகவலை தற்போது சீன அரசு மறுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com