துருக்கியில் ரஷிய எஸ்-400 ஏவுகணை பாகங்கள்: அமெரிக்காவின் எச்சரிக்கை நிராகரிப்பு

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, ரஷியாவிடமிருந்து அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளின் பாகங்களை துருக்கி வெள்ளிக்கிழமை பெற்றது.
எஸ்-400 பாகங்களுடன் அங்காராவிலுள்ள முர்டேட் விமான தளத்தில் வெள்ளிக்கிழமை வந்திறங்கிய ரஷிய போக்குவரத்து விமானம்.
எஸ்-400 பாகங்களுடன் அங்காராவிலுள்ள முர்டேட் விமான தளத்தில் வெள்ளிக்கிழமை வந்திறங்கிய ரஷிய போக்குவரத்து விமானம்.


அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, ரஷியாவிடமிருந்து அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளின் பாகங்களை துருக்கி வெள்ளிக்கிழமை பெற்றது.
இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷியாவுடன் நாங்கள் மேற்கொண்டுள்ள கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ், எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை அந்த நாடு வெள்ளிக்கிழமை முதல் அனுப்பத் தொடங்கியுள்ளது.
தலைநகர் அங்காராவிலுள்ள முர்டேட் விமான தளத்தில், விமானம் மூலம் அந்த ஏவுகணைத் தொகுதிகளின் பாகங்கள் வந்திறங்கின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையே இருந்து வந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் ஐரோப்பிய ஆதரவு அரசுப் படையினருக்கும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்தது.
அப்போது, உக்ரைனின் அங்கமாக இருந்து வந்த கிரீமியா தீபகற்பத்தை கைப்பற்றிய ரஷியா, அந்தப் பகுதியை தங்களுடன் இணைத்துக் கொண்டது.
இதனை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் எதிரி நாடுகளை பொருளாதாரத் தடை மூலம் எதிர்கொள்ளும் மசோதா' (சிஏஏடிஎஸ்ஏ) என்ற பெயரில் அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு நிறைவேற்றிய மசோதாவில், ஈரான், வட கொரியாவுடன் ரஷியாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
அந்தச் சட்டத்தின் கீழ், ரஷிய ராணுவ தளவாட ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், எதிரிகளின் ஏவுகணைகளையும், விமானங்களையும் வானில் இடைமறித்து தாக்கி அழிக்க வல்ல எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை 250 கோடி டாலருக்கு (சுமார் ரூ.17,162 கோடி) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரஷியாவுடன் துருக்கி கடந்த 2017-ஆம் ஆண்டு மேற்கொண்டது.
எனினும், அந்த ஒப்பந்தம் தங்களது சிஏஏடிஎஸ்ஏ ஒப்பந்தத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, ரஷியாவிடமிருந்து துருக்கி எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை வாங்கினால், துருக்கிக்கு அதிநவீன எஃப்-35 விமானங்களை விற்பனை செய்வதற்காக தாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்தது.
மேலும், ரஷியாவுடனான கொள்முதல் ஒப்பந்தத்தை இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் ரத்து செய்ய வேண்டும் என்று துருக்கிக்கு அமெரிக்கா கெடு விதித்திருந்தது.
எனினும், ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு இடையே அந்த ஏவுகணைத் தொகுதிகளின் பாகங்கள் துருக்கி வந்தடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com