ஹாங்காங்: அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஹாங்காங்: அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக ஹாங்காங்கில் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன.
 அதனைத் தொடர்ந்து, அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் அறிவித்தார்.
 எனினும், அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்தன. இந்தப் போராட்டங்களின்போது, போலீஸார் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
 இந்த நிலையில், கேரி லாம் பதவி விலக வேண்டும்; போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய வன்முறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 10,000 பேர் ஹாங்காங்கின் ஷா டின் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 அவர்களில் சிலர் சீனாவிடமிருந்து ஹாங்காங் விடுதலை அடைய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் பிரிட்டன் ஆட்சி காலத்து ஹாங்காங் கொடியையும், சிலர் அமெரிக்கக் கொடியையும் ஏந்தி வந்தனர்.
 ஹாங்காங்கில் உண்மையான ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
 "போலீஸார் பொய்யர்கள்', "ஹாங்காங்கைக் காப்போம்' உள்ளிட்ட பல்வேறு அரசு எதிர்ப்பு கோஷங்கள் அடங்கிய பதாகையை பலர் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 முன்னதாக, ஹாங்காங்கில் சீனாவிலிருந்து ஏராளமானவர்கள் வந்து போட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், அதனால் ஹாங்காங் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி, சீன வர்த்தகப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் கலைத்தனர். இதில் சிலர் காயமடைந்தனர்.
 இந்தச் சூழலில், ஹாங்காங் அரசுக்கு எதிராக மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com