எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குறித்த டிரம்ப் கருத்தால் சர்ச்சை

வெள்ளை இனத்தைச் சேராத 4 ஜனநாயக் கட்சி பெண் எம்.பி.க்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் ரஷிதா லாயிப், இல்ஹன் ஒமர், லெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கார்டெஸ், அயான்னா ப்ரெஸ்லி ஆகியோர்.
வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் ரஷிதா லாயிப், இல்ஹன் ஒமர், லெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கார்டெஸ், அயான்னா ப்ரெஸ்லி ஆகியோர்.


வெள்ளை இனத்தைச் சேராத 4 ஜனநாயக் கட்சி பெண் எம்.பி.க்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கார்டெஸ், இல்ஹன் ஒமர், ரஷிதா லாயிப், அயான்னா ப்ரெஸ்லி ஆகிய நான்கு பெண் எம்.பி.க்களுக்கு எதிராக சுட்டுரை வலைதளத்தில் அதிபர் டிரம்ப் பதிவுகள் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவுகளில், அமெரிக்க நலன்களுக்கு எதிராக அவர்கள் பேசி வருவதாகவும், அமெரிக்காவை சோஷலிஸ, கம்யூனிஸ நாடாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், அமெரிக்காவில் இருக்க விருப்பம் இல்லாவிட்டால், அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் தனது பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
வெள்ளை இனத்தைச் சேராத அந்த 4 பெண் எம்.பி.க்கள் குறித்து டிரம்ப் கூறிய இந்தக் கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, டிரம்ப்பின் சுட்டுரைப் பதிவுகளுக்கு சம்பந்தப்பட்ட 4 பெண் எம்.பி.க்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறியதாவது:
அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக டிரம்ப் இனவாத தாக்குதல் நடத்தியுள்ளார்.
அவரது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள 4 பேரும் பெண்கள் என்பதும், வெள்ளை இனத்தைச் சேராதவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவில் வெள்ளை இன தேசியவாதம் என்பது முதலில் தனியறைகளிலிலும், பிறகு தொலைக்காட்சிகளிலும் பேசப்பட்டு வந்தது; தற்போது அது வெள்ளை மாளிகை வரை வந்துவிட்டது என்று அவர்கள் விமர்சித்தனர்.
டிரம்ப் விளக்கம்

4 ஜனநாயகக் கட்சி பெண் எம்.பி.க்களும் அமெரிக்காவை வெறுப்பதால்தான் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று சுட்டுரையில் பதிவிட்டதாகவும், அது இனவாதக் கருத்து அல்ல எனவும் டிரம்ப் விளக்கமளித்துள்ளார். தாம் தெரிவித்த கருத்து சரியா, தவறா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்வார்கள் எனவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com