Enable Javscript for better performance
சுதந்திரம் கோரினால் போர்!: தைவானுக்கு சீனா எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    
    chin


    தங்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான நடவடிக்கைகளை தைவான் மேற்கொண்டால், அந்த நாடு மீது போர் தொடுக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.
    சீன எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவிடமிருந்து 220 கோடி டாலர் (சுமார் ரூ.15,180 கோடி) மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய தைவான் முடிவு செய்துள்ள சூழலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து சீன பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான் புதன்கிழமை கூறியதாவது:
    சீனாவுடன் தைவானை அமைதியான முறையில் மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகளை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
    தைவான் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொள்வதற்கு இனி எந்த வழியும் கிடையாது.
    சீனாவிடமிருந்து தைவானைப் பிரித்து, அதனை தனி சுதந்திர நாடாக்குவதற்கு யாராவது முயன்றால், அதனைத் தடுப்பதற்காக போரில் ஈடுபட சீன ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
    சீனாவின் இறையாண்மையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
    தங்களது 108 ஆபிராம் பீரங்கிகள், 250 ஸ்டிங்கர் ரக ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
    220 கோடி டாலர் மதிப்பிலான இந்த விற்பனைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தங்களது நாட்டின் அங்கமான தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வது, தங்களது இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது.
    இந்த ஆயுத விற்பனை, தைவான், திபெத் ஆகியவை அனைத்தும் ஒரே தேசம் என்ற தங்களது ஒற்றை சீனா கொள்கைக்கு எதிரானது என்று அந்த நாடு கூறி வருகிறது.


    எனினும், தங்களது தேசப் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் மிகவும் இன்றியமையதவை என்று தைவான் கூறியுள்ளது.
    மேலும், அமெரிக்காவிடமிருந்து அந்த தளவாடங்களை வாங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லப்போவதாகவும் அந்த நாடு தெரிவித்தது.
    அதன் தொடர்ச்சியாகவே சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
    சீனக் குடியரசுக்கும் (ஆர்ஓசி) கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையில், நாட்டின் பெரும்பாலான நிலப்பகுதியை கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 1949-ஆம் ஆண்டு கைப்பற்றியது.
    தைவான் மற்றும் சில தீவுகள் மட்டுமே ஆர்ஏசி-யின் கட்டுப்பாட்டில் உள்ளன.
    இந்த நிலையில், தைவானை அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. எனினும், தன்னாட்சி நடைபெற்று வரும் தைவானுடன் அதிகாரப்பூர்வமற்ற நட்புறவை அமெரிக்கா மிக நெருக்கமாக பேணி வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai