
ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர்.
ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை தடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு அந்நாட்டு மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. மேலும், ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் மற்றும் ஹாங்காங் காவல் துறைக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் அறிவித்தார். எனினும், அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்தன.
இந்தப் போராட்டங்களின்போது, போலீஸார் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில், கேரி லாம் பதவி விலக வேண்டும் என்றும், போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய வன்முறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 10,000 பேர் ஹாங்காங்கின் ஷா டின் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வன்முறை மற்றும் போராட்டங்களை நிறுத்துவதற்கு ஹாங்காங் மக்கள் ஒத்துழைக்குமாறு சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஹாங்காங் விவகாரங்களுக்கான சீன அரசு செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் சிலர் உருவாக்கும் பிரச்னைகளால், நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் நலன் பாதிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக போராடுகிறோம் என்ற பெயரில் மக்களின் நிம்மதியை சிலர் கெடுக்கின்றனர். சட்டத்தின் அடிப்படையில் செயல்படும் யாரும் இந்தப் போராட்டங்களைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால், மக்கள் அனைவரும், இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒத்துழைக்க வேண்டும்.
ஹாங்காங் அரசின் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு கேரி லாம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் இதுவரை ஹாங்காங்கின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், மக்கள் நலத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஹாங்காங்கில் தற்போதிருக்கும் குழப்பத்தையும் பொறுமையாக கையாண்டு வருகிறார். அவரது நிர்வாகத்துக்கு சீனா எப்போதும் ஆதரவளிக்கும்.
அதுபோல ஹாங்காங் காவல் துறையினர், கடந்த ஒரு மாதமாக கடும் மனஅழுத்தத்தை எதிர்கொண்டுள்ளனர். ஹாங்காங்கில் குழப்பத்தை தவிர்த்து அமைதியை நிலைநாட்ட காவல் துறையினர் பெரிதும் முயற்சித்தனர். காவல் துறையினர், தங்களது குடும்பங்களை விடுத்து, நாட்டின் நலத்துக்காக பல தியாகங்களை கடந்த சில வாரங்களாக செய்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை பாராட்ட வேண்டுமே தவிர, குற்றம்சுமத்தி விசாரணை நடத்தக் கூடாது. சில நாடுகள் காவல் துறையினரின் நடவடிக்கையை பற்றி தேவையற்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர். சட்டவிரோத செயல்களை எதிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதைக் காவல் துறையினர் செய்தால் குற்றம்சுமத்துகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.