
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், தற்போது போராட்டக் குழு தலைவர்கள் மூவரை ராணுவம் கைது செய்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சூடானில் போராட்டக் குழுவினருக்கும், ராணுவ ஆட்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து விவாதிப்பதற்காக எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது தலைநகர் கார்டூம் வந்திருந்தார்.
அவருடன் கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களான இஸ்மாயில் ஜலாப், முபாரக் அர்டால் ஆகியோர் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் ராணுவம் சனிக்கிழமை கைது செய்தது.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் முகமது இஸ்மத்தையும் பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூடானில் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் சர்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த அதிபர் ஒமர் அல்-பஷீருக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, அவரது ஆட்சியை ராணுவம் கடந்த ஏப்ரல் மாதம் அகற்றியது.
பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னதாக, சூடானில் ஜனநாயக ஆட்சி முறையை 3 ஆண்டுகளில் படிப்படியாகக் கொண்டு வருவதாக அல்-பஷீர் அறிவித்திருந்தார்.
எனினும், புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராணுவ கவுன்சில், இன்னும் 9 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தவிருப்பதாக அறிவித்தது.
இதனை ஏற்காத ஜனநாய ஆதரவு அமைப்பினர், கடந்த திங்கள்கிழமையிலிருந்து சூடான் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்காக ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தச் சூழலில், கிளர்ச்சிக் குழு தலைவர்களை ராணுவம் கைது செய்துள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.