Enable Javscript for better performance
அமெரிக்கா - ஈரான்  இடையே மத்தியஸ்தம்.. சாதிப்பாராஜப்பான் பிரதமர்?- Dinamani

சுடச்சுட

  

  அமெரிக்கா - ஈரான்  இடையே மத்தியஸ்தம்.. சாதிப்பாராஜப்பான் பிரதமர்?

  By - நாகா  |   Published on : 13th June 2019 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  japan

  ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானியுடன் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.

    
  ஈரானில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மேற்கொண்டுள்ள இரு நாள் சுற்றுப் பயணம், வழக்கமாக ஒரு நாட்டுத் தலைவர்கள் இன்னொரு நாட்டுக்குச் செல்வதைப் போன்ற சாதாரண 
  அரசுமுறைப் பயணமல்ல.
  இரு நாட்டு நல்லுறவு, ஒத்துழைப்பு போன்ற ராஜீய சங்கதிகளுக்கு அப்பால், இன்னொரு உயர்ந்த நோக்கத்தை உள்ளத்தில் ஏந்திதான் ஷின்ஸோ அபே, ஈரான் மண்ணில் காலடி வைத்துள்ளார்.
  அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிதான் அது.
  அணு ஆயுதம் தயாரித்தே தீருவோம் என்று ஈரானின் முன்னாள் ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொண்டும், அந்த நாட்டை அடக்குவதற்காக வல்லரசு நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துக் கொண்டும் இருந்த நிலையில், ஈரான் அதிபராக ஹஸன் ரெளஹானி பொறுப்பேற்ற பிறகு நிலைமையில் சற்று மாற்றம் உருவாக ஆரம்பித்தது.
  மிதவாதியாக அறியப்படும் அவர், வல்லரசு நாடுகளுடன் தொடர்ந்து மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக, கடந்த 2015-ஆம் ஆண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஒப்பந்தம் உருவானது.
  தமது அணுசக்தி திட்டங்கள் மூலம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படாது என்பதை உறுதி செய்ய அந்த ஒப்பந்தத்தில் ஈரான் சம்மதித்தது.
  அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஒப்புக் கொண்டன.
  அதன் விளைவாக, ஈரானின் அணுசக்தி மையங்கள் சர்வதேச பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப்பட்டன.
  ஒப்பந்தத்தில் கூறியிருந்த பல்வேறு நிபந்தனைகளை ஈரான் செயல்படுத்தத் தொடங்கியது.
  ஈரான் மீது பல ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளும் முதல்முறையாக நீக்கப்பட்டன.
  இந்தச் சூழலில்தான், 2016-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று, அதில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
  ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், அந்த நாடு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்கு போதுமானது இல்லை என்று தேர்தல் பிரசாரத்தின்போது திரும்பத் திரும்பக் கூறி வந்த டிரம்ப், அதிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்.
  அதன் தொடர்ச்சியாக, ஈரான் மீது விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வந்தன. கடைசியாக, ஈரான் பொருளாதாரத்தின் ஆதாரமாகத் திகழும் எண்ணெய் ஏற்றுமதிக்கே டிரம்ப் தடை விதித்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் மேலும், மேலும் அதிகரித்தது.
  ஈரானைக் கட்டுப்படுத்த வெறும் பொருளாதாரத் தடைகளை மட்டும் விதிக்க மாட்டோம், ராணுவ ரீதியிலும் அந்த நாட்டை எதிர்கொள்வோம் என்று உணர்த்தும் வகையில், வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்கள், தாக்குதல் போர்க் கப்பல்களை அனுப்பியது எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தது.
  அதன் தொடர்ச்சியாக, ஐக்கிய அரபு அமீரகம் அருகே அமெரிக்காவின் கூட்டாளியான சவூதி அரேபியாவின் எண்ணெய்க் கப்பல்கள் மர்மமான முறையில் தாக்கப்பட்டது, அந்தத் தீயை மேலும் உக்கிரமாக்கும் வகையில் சாமரம் வீசியது.
  இந்தச் சூழலில்தான், அமைதியின் தூதராக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே களமிறங்கியுள்ளார்.
  உண்மையில், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் மத்தியஸ்தம் செய்து வைப்பதற்குரிய முழு தகுதியும் ஜப்பானுக்கு உள்ளது.
  காரணம், அந்த இரு நாடுகளுடனும் மிக நெருங்கி நட்புறவை ஜப்பான் பேணி வருகிறது.
  ஈரானுடனான ஜப்பானின் உறவு, 70 ஆண்டுகள் பழைமையானது. 1950-களில் ஈரான் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, ஜப்பான் அந்தத் தடையை உடைத்து எண்ணெய் வாங்குவதற்காக ஈரானுக்கு தனது கப்பலை அனுப்பி வைத்தது.
  30 ஆண்டுகள் கழித்து, ஈரானுக்கும், ஈராக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஷின்ஸோவின் தந்தை ஷின்டாரோ அபே இரு நாடுகளுக்கும் சென்று மத்தியஸ்தம் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தையில் ஷின்ஸோவும் செயலர் என்ற முறையில் பங்கேற்றுள்ளார்.
  ஒரு வகையில், மத்தியக் கிழக்கு நாடுகளையும் உலகின் பிற நாடுகளையும் இணைக்கும் பாலமாக ஜப்பான் செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
  மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தில் பிற நாடுகள் ராணுவ ரீதியிலான உறவுகளைப் பேணி வரும் சூழலில், ஜப்பான் மட்டும்தான் ராஜீய மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகளை மட்டுமே பேணி வருகிறது. 
  இதன் காரணமாக, பிற அமெரிக்கக் கூட்டாளிகளைவிட ஜப்பானைத்தான் உண்மையான நடுநிலை நாடாக பிராந்திய நாடுகள் கருதுகின்றன என்கிறார்கள் அவர்கள்.
  அந்த வகையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜப்பான் உண்மையான மத்தியஸ்தராக இருக்கும் என்ற நம்பிக்கை ஈரானுக்கு இருக்கும் என்பது அவர்கள் கணிப்பு.
  அமெரிக்க - ஈரான் இடையிலான பதற்றம் தணிவது ஜப்பானுக்கும் தேவையான ஒன்றாகும். காரணம், ஜப்பான் ஈரானிடமிருந்துதான் பெருமளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது.
  அமெரிக்கப் பொருளாதாரத் தடையால் இந்தியாவைப் போலவே ஜப்பானும் பாதிக்கப்பட்டுள்ளது.
  எனவே, இந்த அமைதி முயற்சியில் ஷின்ஸோ அபே இறங்கியுள்ளதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது.
  இருந்தாலும், ஷின்ஸோவின் முயற்சி பலன் தருமா என்கிற கேள்வியும் எழாமல் இருக்க முடியாது.
  இதுகுறித்து சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகையில், தற்போது எதிரும் புதிருமாக நிற்கும் அமெரிக்காவையும், ஈரானையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேஜைக்கு அழைத்து வந்தாலே, அது ஷின்ஸோ அபேவின் முயற்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருத முடியும் என்கிறார்கள்.
  அதற்கு முன்னோட்டமாக, ஜப்பானில் இந்த ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானிக்கு ஷின்ஸோ அபே அழைப்பு விடுக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
  ஷின்ஸோவின் இத்தகைய முயற்சிகள் எந்த அளவுக்குப் பலனளிக்கப் போகின்றன, அமெரிக்காவும், ஈரானும் எவ்வளவு விரைவில் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கப் போகின்றன என்பவை, அவருடைய இரு நாள் ஈரான் சுற்றுப் பயணத்திலேயே ஓரளவுக்குத் தெரிந்துவிடும்.

  அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானபோது...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai