ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது வியாழக்கிழமை மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமன் வளைகுடாவில் மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்கியதில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்.
ஓமன் வளைகுடாவில் மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்கியதில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்.


ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது வியாழக்கிழமை மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
 முதலாவதாக, நார்வே நாட்டுக்குச் சொந்தமான பிராண்ட் ஆல்டெய்ர் எண்ணெய் கப்பல் ஓமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த போது காலை  6.03 மணி அளவில் (உள்ளூர் நேரம்) மர்ம நபர்களால் தாக்குதலுக்கு ஆளானது. அந்த கப்பல் மீது மூன்று குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நார்வே கப்பலில் 1.11 லட்சம் டன் கச்சா எண்ணெய் உள்ள நிலையில், அதில் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. தாக்குதலுக்குள்ளான கப்பலில் மாலுமிகள் உள்பட, 23 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த கப்பல் முற்றிலும் எரிந்து மூழ்கியதாக கூறப்படுகிறது. 
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு,  சவூதி அரேபியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மெத்தனால் ஏற்றிச் சென்ற பனாமா நாட்டைச் சேர்ந்த கோக்குவா கரேஜியஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், மாலுமிகள் உள்பட 21 பேர் இருந்துள்ளனர் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்த நிலையில், தாக்குதலுக்குள்ளான இரண்டு கப்பலிலும் இருந்த 44 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக ஈரானைச் சேர்ந்த ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 பஹ்ரைன் கடல் பகுதி அருகே முகாமிட்டுள்ள அமெரிக்க கப்பலுக்கு, ஓமன் வளைகுடாவில் தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு கப்பல்களிலிருந்தும் உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் அழைப்பு உள்ளூர் நேரப்படி காலை 6.12 மணிக்கும், இரண்டாவது அழைப்பு காலை 7.00 மணிக்கும் வந்தது.  இதையடுத்து, அமெரிக்க கடற்படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வேண்டிய உதவிகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடந்த மே மாதம் இதே பகுதியில் சவூதி அரேபியாவுக்கு சொந்தமான இரு எண்ணெய் கப்பல்கள் உள்பட நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் மேலும் இரண்டு எண்ணெய் கப்பல்கள் குறி வைத்து தாக்கப்பட்டது சர்வதேச நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்ததுடன், அது பல நாடுகளின் வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com