ஹாங்காங் போராட்டம் திட்டமிட்ட கலவரம்: சீனா குற்றச்சாட்டு

ஹாங்காங்கின் நாடு கடத்தும் மசோதாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மிகப் பெரிய போராட்டம் என்பது ஒரு திட்டமிட்ட கலவரம் என சீனா வியாழக்கிழமை தெரிவித்தது.


ஹாங்காங்கின் நாடு கடத்தும் மசோதாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மிகப் பெரிய போராட்டம் என்பது ஒரு திட்டமிட்ட கலவரம் என சீனா வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: 
ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் மற்றும் இதர அதிகாரிகளிடம், சமீபத்திய போராட்டங்கள் தொடர்பாக ஏற்கெனவே பேசியுள்ளேன். அப்பகுதியில் நடைபெற்ற போராட்டங்கள் அமைதிப் பேரணியாக இல்லை. ஆனால், அது ஒரு குழுவால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம்.
ஹாங்காங்கின் வளமை மற்றும் ஸ்திரத்தன்மையை குலைக்கும் வகையிலான எந்தவொரு செயலும் ஹாங்காங் பொதுமக்களின் கருத்துக்கு எதிரானது என்பதே எனது  எண்ணம்.
எனவே, சட்ட விதிமுறைகளின்படி இந்த விவகாரத்தை அணுகும் ஹாங்காங் அரசுக்கு சீனா எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் கிரிமினல் குற்றமிழைக்கும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரணை மேற்கொள்ளும் சட்ட மசோதாவை பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யவிருப்பதாக ஹாங்காங் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து  ஜனநாயக ஆதரவாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மற்றும் பொதுமக்களும் இணைந்து நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
இதையடுத்து, போலீஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதில், 79 பேர் காயமடைந்தனர். இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
கடந்த 1997-ஆம் ஆண்டு ஹாங்காங் நிர்வாகம் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து, தற்போதுதான் மிக மோசமான போராட்ட சூழ்நிலையை ஹாங்காங் அரசு எதிர்கொண்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங் அரசுக்கு எதிராக மற்றொரு மிகப்பெரிய அளவிலான பேரணியை நடத்த திட்டமிட்டிருப்பதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உலக நாடுகளின் கவனம் ஹாங்காங்கை நோக்கி திரும்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com