ஈரானிடமிருந்து மின்சாரம் கொள்முதல்: இராக்குக்கான சலுகையை நீட்டித்தது அமெரிக்கா

ஈரானிடமிருந்து மின்சார இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையிலிருந்து இராக்குக்கு மேலும் 90 நாள்கள் விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானிடமிருந்து மின்சாரம் கொள்முதல்: இராக்குக்கான சலுகையை நீட்டித்தது அமெரிக்கா

ஈரானிடமிருந்து மின்சார இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையிலிருந்து இராக்குக்கு மேலும் 90 நாள்கள் விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
உலகின் வெப்பம் மிகுந்த நாடுகளில் ஒன்றான இராக், தனது மின்சாரத் தேவைக்காக அண்டை நாடான ஈரானையே பெரிதும் நம்பியுள்ளது.
மின்சாரப் பற்றாக்குறை காரணமாக இராக்கில் 20 மணி நேரம் கூட மின்தடை ஏற்பட்டுவது வழக்கமான ஒன்றாகும்.
கடந்த ஆண்டின் கோடைக் காலத்தின்போது மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட பகுதிகளில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது.
இந்தச் சூழலிலில், இந்த கோடைக் காலத்திலும் சராசரியைவிட இராக்குக்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது.
அதனை ஈடுகட்ட, மின் உற்பத்திக்காக தினமும் 2.8 கோடி கனமீட்டர் எரிபொருளையும், 1,300 மெகாவாட் மின்சாரத்தை நேரடியாகவும் ஈரானிடமிருந்து இராக் இறக்குமதி செய்துவருகிறது.
ஈரானை பிராந்திய எதிரியாகக் கருதி வரும் அமெரிக்காவுக்கு, இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஈரானுடன் வல்லரசு நாடுகள் செய்துகொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.
அதன் ஒரு பகுதியாக, பிற நாடுகளுக்கு எண்ணெய், மின்சாரம் போன்றவற்றை ஈரான் ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
எனினும், ஈரானிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு, அந்தத் தடையிலிருந்து டிரம்ப் தற்காலிக விலக்கு அளித்திருந்தார். எனினும், அந்தச் சலுகை பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதே போல், ஈரானிடமிருந்து எரிபொருள் மற்றும் மின்சாரத்தை இராக் தொடர்ந்து இறக்குமதி செய்வதற்கு அதிபர் டிரம்ப் தொடக்கத்தில் 45 நாள்கள் அனுமதி அளித்திருந்தார்.
எனினும், இராக்கில் கோடைகால மின்சாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அந்தச் சலுகையை மேலும் 90 நாள்களுக்கு அவர் நீட்டித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com