நாடுகடத்தல் சட்ட விவகாரம்: மன்னிப்பு கோரியது ஹாங்காங் அரசு

சர்ச்சைக் குரிய நாடுகடத்தல் சட்ட வரைவைக் கொண்டு வந்ததன் மூலம் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியதற்கு ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கேட்டார்.
ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேரீ லாம்.
ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேரீ லாம்.


சர்ச்சைக் குரிய நாடுகடத்தல் சட்ட வரைவைக் கொண்டு வந்ததன் மூலம் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியதற்கு ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் செவ்வாய்க்கிழமை மன்னிப்பு கேட்டார்.
எனினும், போராட்டக் குழுவினர் கோரியபடி தனது பதவியை ராஜிநாமா செய்ய அவர் மறுத்துவிட்டார்.
இதுகுறித்து ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேரீ லாம் கூறியதாவது:  புதிய நாடுகடத்தும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்ததற்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.
அந்த சட்டம் சர்ச்சையையும், விவாதங்களையும் உருவாக்கியது. மேலும், மக்களிடையே ஒருவித அச்சத்தையும் அந்த சட்ட வரைவு ஏற்படுத்தியது. 
இந்த நிலையை ஏற்படுத்தியதற்காக ஹாங்காங் மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஹாங்காங் அரசின் தலைவராக நான் தொடர்ந்து பொறுப்பு வகித்து, மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய பாடுபடுவேன்.
மசோதா காலாவதியாகிவிடும்: சர்ச்சைக்குரிய நாடுகடத்தும் மசோதா குறித்த அச்சம் மக்களிடையே நீங்காதவரை, அதனை நான் சட்டப் பேரவையில் முன்னெடுத்துச் செல்லப்போவதில்லை.
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்படாவிட்டால் அது காலாவதியாகிவிடும். அதனை ஹாங்காங் அரசு தடுக்காது என்றார் கேரீ லாம்.
ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.
அந்தச் சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டத்தை மிஞ்சும் அளவுக்கு, நாடுகடத்தல் சட்ட மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
இந்தச் சூழலில், ஹாங்காங் அரசின் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
போதாது!
நாடுகடத்தல் சட்ட மசோதா விவகாரத்தில் ஹாங்காங் அரசின் தலைவர் கேரீ லாம் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


கேரீ லாம் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக் குழுவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் குறித்து பேசாதது, 
அவரது முரட்டுத் தனத்தை வெளிப்படுத்தவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com