இலங்கையில் நெருக்கடி நிலை மேலும் நீட்டிப்பு

இலங்கையில் நெருக்கடி நிலை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நெருக்கடி நிலை மேலும் நீட்டிப்பு


இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் திடீர் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 258 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலுக்கு இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு மீது அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்தத் தாக்குதலை அடுத்து, இலங்கையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பௌத்த மதத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் மதக்கலவரம் நேரிடும் அபாயம் உருவானது.

இதை கருத்தில் கொண்டு, இலங்கையில் நெருக்கடி நிலையை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அமல்படுத்தினார். இந்த நெருக்கடி நிலை சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

இருப்பினும், நெருக்கடி நிலையை அதிபர் சிறீசேனா நீட்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டில் பொது மக்களின் பாதுகாப்புக்காக நெருக்கடி நிலை மேலும் நீட்டிக்கப்படுகிறது. நெருக்கடி நிலை அமலில் இருக்கும் வரையிலும், பொது பாதுகாப்பு சட்ட விதிகள் அமலில் இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு சட்ட விதிகளின்கீழ், இலங்கை போலீஸாருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பல்வேறு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளின்கீழ், சந்தேகப்படும் நபர்களை போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் கைது செய்யவோ, விசாரணைக்கு அழைத்து செல்லவோ முடியும்.
முன்னதாக, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடனான சந்திப்பின்போது இலங்கையில் பாதுகாப்பு சூழ்நிலை 99 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. ஆதலால் ஜூன் 22ஆம் தேதிக்குப் பிறகு நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட மாட்டாது என சிறீசேனா தெரிவித்திருந்தார். ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக வேறு யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியிருந்தார். இதற்கு மாறாக, இலங்கையில் நெருக்கடி நிலையை சிறீசேனா நீட்டிப்பு செய்துள்ளார். இதுகுறித்து இலங்கை அரசின் கருத்தை செய்தியாளர்கள் அறிய முயன்றனர். ஆனால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

நெருக்கடி நிலையை அமல்படுத்தும்போது ஒரு மாதத்துக்கு மட்டுமே செயல்படுத்த முடியும். அதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் தனது ஒப்புதலை 10 நாள்களில் அளிக்க வேண்டும். இலங்கை அதிபர் சிறீசேனா வசமே பாதுகாப்பு அமைச்சக இலாகா உள்ளது. இதனால், ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே உளவுத் தகவல் அளித்திருந்த போதிலும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாக சிறீசேனா மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே 37 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் இலங்கையில் அமைதி திரும்பியிருந்த நிலையில், ஈஸ்டர் தின தாக்குதல் மீண்டும் அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com