Enable Javscript for better performance
ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடை: டிரம்ப் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

  

  ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடை: டிரம்ப் அறிவிப்பு

  By DIN  |   Published on : 24th June 2019 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  trump

   

  ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளிடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பொருளாதாரப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

  முன்னதாக, அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து, அந்நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டார். 

  எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றார். இந்த சூழலில், ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது என்ற அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.

  கடுமையான பொருளாதாரத் தடைகள்:  இது தொடர்பாக சுட்டுரையில் டிரம்ப்  வெளியிட்ட பதிவில், "ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன. 

  இவை, திங்கள்கிழமை (ஜூன் 24) முதல் அமலுக்கு வரும்' என்று கூறியுள்ளார். முன்னதாக, செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய அவர், "நாம் மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை (ஈரான் மீது) விதிக்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் நாம் (அமெரிக்கா) விரைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஈரான் மீது அமெரிக்காவுக்கு எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை. அவர்கள் வளமான நாடாக இருக்க விரும்பினால் அதற்கு தடையில்லை. அதே நேரத்தில் அணுஆயுத பலத்தைக் காட்டுவோம் என்று ஈரான் ஆணவப்போக்கில் செயல்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம்' என்றார்.

  இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா ராணுவரீதியாக இப்போதைக்கு நடவடிக்கை எடுக்காது என்பது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் ஈரான் மீது அமெரிக்கா விதிக்கும் கூடுதல் பொருளாதாரத் தடைகள் பல்வேறு உலக நாடுகளில் வெவ்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

  முக்கியமாக ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  ஏற்கெனவே உள்ள தடைகளால் ஈரானால் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருள்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. 

  இதனால் அங்கு இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது டிரம்ப் அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகள் ஈரானுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

  தடையின் பின்னணி: முன்னதாக, 2006-ஆம் ஆண்டு அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த நாடு மீது அமெரிக்கா படிப்படியாக கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.  இதன் பிறகு நடைபெற்ற பலசுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் ஈரானுக்கும், அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுஆயுதத் தயாரிப்பு தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.

  தனது அணுசக்தி திட்டங்கள், அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதாக அந்த ஒப்பந்தத்தில் ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. 

  அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மேற்கொண்ட தீவிர முயற்சிகளால் ஒப்பந்தம் சாத்தியமானது.

  எனினும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு ஈரான்-அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டது. 

  முதலில் ஈரான் குடிமக்களுக்கு அமெரிக்க விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில், ஈரானுடனான அணுஆயுத தயாரிப்பு தடை  ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாகவும் டிரம்ப் அறிவித்தார். இதனால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்கு வந்தன. 

  அந்த நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் தடையை மீறி ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் அமெரிக்காவின் தடை பாயும். எனவே, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்தியா, தென்கொரியா, ஜப்பான், சீனா, துருக்கி, தைவான், இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகள் வேறு வழியின்றி அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தின. இப்போது டிரம்ப் கூடுதலாக தடைகளை விதித்துள்ளது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

  "சைபர்' தாக்குதல்    

  ஈரான் அணுஆயுதத் திட்டங்களை முடக்கும் வகையில் அந்நாட்டின் மீது சைபர் (இணைய வழி) தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  இந்தத் தாக்குதல் மூலம் ஈரான் அணுஆயுதத் திட்டத்துக்கு பயன்படுத்தும் கணினிகளை அமெரிக்க ராணுவ இணையதள வல்லுநர்கள் முடக்குவார்கள். இதனால், அந்நாடு தொடர்ந்து அணுஆயுதத் தயாரிப்பில் ஈடுபட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "அதிபர் டிரம்ப் உத்தரவின்படி ஈரான் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரானின் அணுஆயுதத் திட்டங்கள் மட்டுமல்லாது, அந்நாட்டின் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்டவையும் முடக்கப்படும்' என்றனர்.

  ஈரானில் பிரிட்டன் அமைச்சர்    

  பிரிட்டன் வெளியுறவுத் துறை இணையமைச்சர் (மத்திய கிழக்கு நாடுகள்) ஆன்ட்ரூ மோரிசன் ஈரானுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டார். அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கமால் கர்சாயை சந்தித்துப் பேசினார். 

  அப்போது, ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் குறித்து இருதரப்பினரும் பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையிலேயே ஆன்ட்ரூ இந்த பயணத்தை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai