வெனிசூலா தொடர்பான அமெரிக்க, ரஷிய தீர்மானங்கள் தோல்வி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

வெனிசூலா தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவும், ரஷியாவும் அடுத்தடுத்து கொண்டு வந்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன.
வெனிசூலா தொடர்பான அமெரிக்க, ரஷிய தீர்மானங்கள் தோல்வி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்


வெனிசூலா தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவும், ரஷியாவும் அடுத்தடுத்து கொண்டு வந்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன.
இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் நிலவி வரும் அரசியல் பதற்றத்துக்கு சக்தி வாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சியில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வெனிசூலாவில் நிலவி வரும் அரசியல் பதற்றத்துக்குத் தீர்வு காணும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வியாழக்கிழமை தீர்மானம் கொண்டு வந்தது.
அந்தத் தீர்மானத்தில், வெனிசூலாவில் உடனடியாக அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், அந்த நாட்டுக்கு அனுப்பப்படும் சர்வதேச நிவாரணப் பொருள்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட 9  உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன.
கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடான தென் ஆப்பிரிக்கா, தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. ஈக்வடோரியல் கீனியா, ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு 9 வாக்குகளே போதும் என்ற நிலையில், அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்படும் சூழல் உருவானது.
எனினும், கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷியாவும், சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தை ரத்து செய்தன.
ரஷியத் தீர்மானம்: அதனைத் தொடர்ந்து, அமெரிக்கத் தீர்மானத்துக்கு மாற்றாக வேறொரு தீர்மானத்தை ரஷியா கொண்டு வந்தது.
அதில், வெனிசூலாவில் நிலவி வரும் பதற்ற நிலைக்கு அரசியல் ரீதியில் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அந்த நாட்டுக்கு அளிக்கப்படும் சர்வதேச நிவாரணப் பொருள்களை மடூரோ தலைமையிலான அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக ரஷியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈக்வடோரியல் கீனியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே வாக்களித்தன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பெரு உள்ளிட்ட 7 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. 4 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதன் காரணமாக, போதிய பெரும்பான்மையின்றி ரஷியாவின் தீர்மானமும் தோல்வியடைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெனிசூலாவில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான ஆட்சியில்  பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக, 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.
எனினும், நாடாளுமன்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தைத் தருவதற்கு பதிலாக,  புதிய அரசியல் சாசனப் பேரவையை 2017-ஆம் ஆண்டு அமைத்த மடூரோ, வெனிசூலாவில் தொடர்ந்து ஆட்சி செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட மடூரோ, நாட்டின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் 10-ஆம் தேதி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்றத் தலைவர் ஜுவான் குவாய்டோ, நாட்டில் நியாயமான அதிபர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மடூரோவை வலியுறுத்தியதுடன், அதுவரை இடைக்கால அதிபராக தாம் பொறுப்பு வகிக்கப்போவதாக அறிவித்தார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
எனினும், ரஷியா, சீனா, துருக்கி, கியூபா உள்ளிட்ட நாடுகள் வெனிசூலா அதிபராக மடூரோ தொடர்வதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com