சீன பாதுகாப்பு துறைக்கு ரூ. 12.51 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்

உலக அளவில் பாதுகாப்புத் துறைக்கு அதிகம் செலவிடுவதில் 2-ஆவது இடத்தில் உள்ள சீனா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்த துறைக்கு ரூ. 12. 51 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சீன பாதுகாப்பு துறைக்கு ரூ. 12.51 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்

உலக அளவில் பாதுகாப்புத் துறைக்கு அதிகம் செலவிடுவதில் 2-ஆவது இடத்தில் உள்ள சீனா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்த துறைக்கு ரூ. 12. 51 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகமாகும்.
சீன நாடாளுமன்றத்தில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை பிரதமர் லீ கெகியாங் செவ்வாய்க்கிழமை வாசித்தார். அதில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 7.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு துறைக்கு இந்தியா ரூ. 3. 18 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதை விட  3 மடங்குக்கும் அதிகமாக பாதுகாப்பு துறைக்கு  சீனா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே பாதுகாப்புத் துறைக்கு அதிக அளவு செலவிடுவதில் அமெரிக்கா(ரூ. 14.10 லட்சம் கோடி) முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் உள்ள சீனா, கடந்த ஆண்டு பட்ஜெட்டில், பாதுகாப்பு துறைக்கு சுமார் ரூ. 12 லட்சம் கோடி நிதியை ஒதுக்கியது. அதற்கு முந்தைய ஆண்டை விட  இது 8. 1 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு 7.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. 
சீன ராணுவத்தை உலக அளவில் பெரிய ராணுவமாக மாற்றும் நோக்கில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் சீனா பல சீர்திருத்தங்களை செய்து வருகிறது. ராணுவத்தில் இருந்து 3 லட்சம் வீரர்களை நீக்கிய பிறகும், 20 லட்சம் வீரர்களையுடைய  உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை உடைய நாடாக சீனா உள்ளது. முன்னதாக, பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து சீன நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் ஜங் யசூய் திங்கள்கிழமை கூறுகையில், "சீனாவின் உள்நாட்டு பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை காப்பதற்காகத்தான் பாதுகாப்புத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதே தவிர, மற்ற நாடுகளை அச்சுறுத்தவதற்காக அல்ல. வளரும் நாடுகளை ஒப்பிடுகையில், பாதுகாப்புத் துறைக்கு  சீனா குறைவான அளவே நிதி ஒதுக்கீடு செய்கிறது' என்றார். 
பொருளாதார வளர்ச்சி இலக்கு  6-6.5 சதவீதம்: உலகிலேயே 2-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா உள்ளது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில், 6 சதவீதம் முதல் 6. 5 சதவீதமாக குறையக் கூடும் என்று பிரதமர் லீ கெகியாங் எச்சரித்துள்ளார். மேலும், வளர்ச்சியில் மிகமோசமான சூழலை நாடு எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவாறு சீன ஏற்றுமதி துறையின் வளர்ச்சி, கடந்த ஆண்டு 6. 6 சதவீதமாக குறைந்தது. அதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இலக்கு 6. 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அதை விடவும் குறைந்துள்ளது. 
அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் மட்டுமன்றி, சீன பொருளாதாரத்தில் தொடர்ந்து காணப்படும் மந்த நிலை, சரிவு ஆகியவற்றால் இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்கு 6-6.5 சதவீதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் லீ கெகியாங் கூறுகையில், "சீனாவின் வளர்ச்சி குறித்து ஆய்வுகள் கூறுவது படி, இந்த ஆண்டின் வளர்ச்சியில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். நாட்டின் வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில் சீனா உள்ளது. நமது பொருளாதார அடிப்படைச் சக்திகள் தளராமல் உள்ளன. அதனால் நாம் நீண்ட காலம் மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்க முடியும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com