
ஏதென்ஸ்: ஞாயிற்றுக் கிழமை விபத்துக்குள்ளான எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானத்தில் 150வது பயணியாக உயிரிழந்திருக்க வேண்டியவர், 2 நிமிட நேர தாமதத்தால் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து மறுபிறவி எடுத்ததாகவே நினைக்கும் ஆன்டோனிஸ் மவ்ரோபாலஸ் என்பவர் கூறுகையில், விமானத்தைப் பிடிப்பதற்கான நுழைவு வாயிலை அடைய எனக்கு யாருமே உதவி செய்யவில்லை. அப்போது எனக்கு பைத்தியமே பிடிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அன்றைய தினம் என் உயிர் பிழைத்திருப்பதை நினைத்தாலே என்று எனது அதிர்ஷ்டமான நாள் என பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் ஆன்டோனிஸ், விமான டிக்கெட்டின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆன்டோனிஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால், விமானத்தில் பயணிப்பதற்கான கேட் மூடப்பட்டு 2 நிமிடத்துக்குப் பிறகுதான் நான் அந்த இடத்தை அடைந்தேன்.
உடனடியாக அடுத்த விமானத்தில் பயணிக்க திட்டமிட்டேன். அப்போதுதான் விமான நிலைய காவல்துறையினர் என்னை அணுகி, விமானத்தை விட்டுவிட்டதற்காக போராட்டம் எல்லாம் செய்யாதீர்கள். ஆனால் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள், நீங்கள் தவறவிட்ட விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது. அதில் போக வேண்டிய ஒரே ஒரு பயணி நீங்கள் மட்டும் தான் உயிரோடு இருக்கிறீர்கள் என்றார்கள். அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நான் விமான டிக்கெட் புக் செய்துவிட்டு அதில் ஏறாததால், என்னிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. எனது அடையாளங்களையும் பெற்றுக் கொண்டுதான் என்னை விடுவித்தனர் என்கிறார் அவர்.
விமான விபத்து..
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர்.
அரசுக்குச் சொந்தமான எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் அந்த விமானம், கடந்த நவம்பர் மாதம் புதிதாக வாங்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தலைநகர் அடிஸ் அபாபாவிலுள்ள விமான நிலையத்திலிருந்து கென்ய தலைநகர் நைரோபியை நோக்கி எங்களது போயிங் விமானம் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. அந்த விமானத்தில் 149 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சுமார் 50 கி.மீ. தொலைவிலுள்ள டேப்ரே ஸெய்ட் என்னுமிடத்தில் அந்த விமானம் உள்ளூர் நேரப்படி காலை 8.44 மணிக்கு விழுந்து நொறுங்கியது.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர், தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இதுவரை தகவல் இல்லை என்று எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. விமானத்திலிருந்த 157 பேரும் விபத்தில் உயிரிழந்ததாக அரசுக்குச் சொந்தமான இபிசி வானொலி அறிவித்துள்ளது.
இந்த விமானத்தில் 4 இந்தியர்கள் உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்ததாகத் தெரிகிறது. கனடாவைச் சேர்ந்த 18 பேர், அமெரிக்கா, சீனா, இத்தாலியிலிருந்து தலா 8 பேர், பிரான்ஸ், பிரிட்டனிலிருந்து தலா 7 பேர், எகிப்பைச் சேர்ந்த 6 பேர், நெதர்லாந்தைச் சேர்ந்த 5 பேர், ஸ்லோவேகியாவைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.