அதிபர் பதவியை விரைவில் அடைவேன்: வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவர் குவாய்டோ சூளுரை

வெனிசூலாவின் அதிபர் பதவியை விரைவில் அடைவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ தெரிவித்துள்ளார்.
அதிபர் பதவியை விரைவில் அடைவேன்: வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவர் குவாய்டோ சூளுரை


வெனிசூலாவின் அதிபர் பதவியை விரைவில் அடைவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ தெரிவித்துள்ளார்.
வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அதிபர் நிகோலஸ் மடூரோவுக்கு எதிராக ஜுவான் குவாய்டோ போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். அந்நாட்டின் இடைக்கால அதிபராகவும் தன்னை அவர் அறிவித்துக் கொண்டார். இதனால், அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவியது. அமெரிக்கா உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளும் குவாய்டோவின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே வேளையில், சீனா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் மடூரோவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
வெனிசூலாவில் மீண்டும் அதிபர் தேர்தல் நடத்தக் கோரும் குவாய்டோவின் கோரிக்கைகளை அதிபர் மடூரோ ஏற்க மறுத்து வருகிறார். அந்நாட்டு ராணுவமும் அதிபர் மடூரோவுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, வெனிசூலாவில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து தென் அமெரிக்காவில் உள்ள மற்ற நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில், அந்நாடுகளுக்கு குவாய்டோ பயணம் மேற்கொண்டார். வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அந்தத் தடையை மீறி கடந்த மாதம் 23-ஆம் தேதியிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த வாரம் நாடு திரும்பினார்.
நிலைமை சீரடையும்: இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை குவாய்டோ முன்னின்று நடத்தி வருகிறார். மடூரோ அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் மக்கள் திரளாகப் பங்கேற்று, குவாய்டோவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தலைநகர் கராகஸில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குவாய்டோ பேசியதாவது:
நாட்டில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நாட்டின் நிலைமை சீராகும். இந்தக் கடினமான இருண்ட காலத்தில் இருந்து, நாடு விரைவில் மீண்டு வரும் என்பதை மக்கள் அனைவரும் உறுதியுடன் நம்ப வேண்டும். நாட்டின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நமக்கு ஓர் அலுவலகம் தேவைப்படுகிறது. நாட்டின் ராணுவம் நமக்கு ஆதரவளித்தால், அதிபர் மாளிகையில் நமக்கான அலுவலகம் தயாராகிவிடும். நாட்டின் அதிபர் பதவியை விரைவில் அடைவேன் என்று அவர் தெரிவித்தார்.
வெனிசூலாவின் பொதுத்துறை மின்சார நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிவரும் நிலையில், தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் அண்மையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நாடே இருளில் மூழ்கியது. இதற்கு ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: இந்த விவகாரம் தொடர்பாக வெனிசூலா அரசு தரப்பு வழக்குரைஞர் தாரீக் வில்லியம் சாப் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் மின்சாரத்தைத் தடை செய்து, எதிர்க்கட்சி நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் குவாய்டோ முக்கியப் பங்கு வகித்து வருகிறார். நாட்டில் வன்முறையை அவர் தூண்டி வருகிறார். 
நாடே இருளில் மூழ்கி இருந்தபோதிலும், போர் புரிய வருமாறு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார். 
அதிபர் மடூரோ, அமெரிக்காவின் உதவியுடன் குவாய்டோ இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டியிருந்தார். 
அதேவேளையில், மக்களுக்கு அடிப்படைத் தேவையான மின்சாரவசதியைக் கூட செய்துதர முடியாத அளவுக்கு வெனிசூலா அரசு உள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com