திருத்தப்பட்ட பிரெக்ஸிட் மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் மீண்டும் நிராகரிப்பு

பிரிட்டன் பிரதமர் தெரசா மே செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த திருத்தப்பட்ட பிரெக்ஸிட் மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.
திருத்தப்பட்ட பிரெக்ஸிட் மசோதாவை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்து உரையாற்றும் பிரதமர் தெரசா மே.
திருத்தப்பட்ட பிரெக்ஸிட் மசோதாவை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்து உரையாற்றும் பிரதமர் தெரசா மே.


பிரிட்டன் பிரதமர் தெரசா மே செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த திருத்தப்பட்ட பிரெக்ஸிட் மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.
28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்த பிறகு, எஞ்சிய 27 நாடுகளுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஐரோப்பிய யூனியனுக்கும், தெரசா மே தலைமையிலான பிரிட்டன் அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு இடையிலான உறவு குறித்த அம்சங்கள் பிரிட்டனின் நலனுக்கு உகந்ததாக இல்லை எனக் கூறி, அந்த ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம்  நிராகரித்தது.
அதையடுத்து, ஒப்பந்தத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மாற்றம் செய்ய ஐரோப்பிய யூனியனுடன் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும், அந்த ஒப்பந்தமே இறுதியானது என்று ஐரோப்பிய யூனியன் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இதையடுத்து, பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் சிறப்பு சலுகைகளுடன் கூடிய உறவைத் தொடர்வதற்கான எந்த ஒப்பந்தமும் இல்லாமல் அந்த அமைப்பிலிருந்து பிரிட்டன் பிரிய நேரிடும் என்று தெரசா மே தெரிவித்து வந்தார்.
ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் இல்லாமலே அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பான தீர்மானம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்டது.
எனினும், அந்தத் தீர்மானத்தையும் நாடாளுமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் அயர்லாந்து தொடர்பான சர்ச்சைக்குரிய பகுதியில் திருத்தம் செய்ய ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளதாகக் கூறி, திருத்தப்பட்ட புதிய பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதாவை பிரதமர் தெரசா மே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தார்.
அந்த மசோதாவுக்கு  எதிராக 391 வாக்குகளும், ஆதரவாக 242 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, அந்த மசோதா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
புதிய பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், தேவையான மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதால் மசோதாவை எதிர்த்து வாக்களித்ததாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, பிரெக்ஸிட் நடவடிக்கையை பிரதமர் தெரசா மே முன்னெடுத்துச் செல்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com