போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை: டிரம்ப் அறிவிப்பு

'போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: 'போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் போக்குவரத்துக்கு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் விமானம் (போயிங்-737 மேக்ஸ் 8) ஞாயிற்றுக்கிழமை தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக, அந்த ரக விமானங்களை வர்த்தகப் பயன்பாட்டில் இருந்து நிறுத்துவதாக சீனா, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, பிரிட்டன், சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்தன. 

இந்நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 விமானப் பயன்பாட்டை நிறுத்துவதாக பிரேஸில், ஆஸ்திரேலியா, ஆர்ஜெண்டீனா, தென்கொரியா, மலேசியா ஆகிய நாடுகளின் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 

இதனிடையே பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் செயல்பாட்டில் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்படும் வரையில் அந்த விமானங்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்படும். இந்த விவகாரத்தில், சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனங்கள், விமான தயாரிப்பாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்தது. 

இதனைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும், வரும் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் அதை செய்து முடிக்க வேண்டும் என்றும் போயிங் நிறுவனம் தயாரித்த போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தின் பாதுகாப்பில் கோளாறு இருந்தால் அந்நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் எச்சரித்தது. 

இந்நிலையில், கடுமையான அழுத்தங்களை தொடர்ந்து அமெரிக்காவும் போயிங் ரக விமானங்களை வர்த்தகப் பயன்பாட்டில் இருந்து நிறுத்துவதாக அதிபர் டெனால்டு டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கர்களின் நலனுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்குவதற்கான உத்தரவையும் அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியா விமான விபத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதன் எதிரொலியாக, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை பயன்படுத்த ஒவ்வொரு நாடுகளாக தடை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 12 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களும், ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திடம் 5 விமானங்களும் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com