மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்காவிடில் பிராந்திய அமைதி பாதிக்கும் : அமெரிக்கா

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்காவிட்டால் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்று
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்காவிடில் பிராந்திய அமைதி பாதிக்கும் : அமெரிக்கா


பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்காவிட்டால் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி ஐ.நா.வில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தனக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா அதற்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தியது.
இந்த முறையும் சீனா அதேபோன்று தடையை ஏற்படுத்துமா அல்லது மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், அசாருக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெறாவிட்டால், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் சீனாவின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித்தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ தெரிவித்தார்.
இதுகுறித்து, வாஷிங்டனில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெய்ஷ் இயக்கத்தை நிறுவியவர் மசூத் அஸார். அதற்கு தலைமையும் வகிக்கிறார். சர்வதேச பயங்கரவாதிக்கான ஐ.நா. வகுத்துள்ள விதிகள் அவருக்கு பொருந்துகின்றன என்றார்.
இந்தியாவில் வெவ்வேறு காலகட்டங்களில், மசூத் அஸாரின் தூண்டுதலின் பேரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், பதான்கோட் மற்றும் உரியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கடந்த மாதம் 14-ஆம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்டவற்றில் மசூத் அஸாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ளன. அந்தத் தீர்மானத்தை வெற்றி அல்லது தோல்வி அடைய வைப்பதற்கான கடைசி வாய்ப்பு சீனாவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகளாகும். அந்நாடுகளுக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு தீர்மானத்தையும் தோல்வி அடையச் செய்ய முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com