பத்திரிகையாளர் கஷோகி கொலை வழக்கில் சவூதி அரேபியாவுக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக நெருங்கிய நட்பு நாடான சவூதி அரேபியாவுக்கு எதிராக
பத்திரிகையாளர் கஷோகி கொலை வழக்கில் சவூதி அரேபியாவுக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு


பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக நெருங்கிய நட்பு நாடான சவூதி அரேபியாவுக்கு எதிராக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்துக்குள் சென்ற கஷோகி பல மணி நேரம் ஆகியும் திரும்பவில்லை. அவர் உள்ளே சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அவர் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அந்தத் தூதரகத்துக்கு ஒரு காரில் சவூதி அரேபிய அதிகாரிகள் வந்தனர். கஷோகியின் வருகைக்கு பிறகு அவர்கள் காரில் புறப்பட்டுச் சென்றனர்..சர்வதேச அளவில் இந்தப் பிரச்னை பூதாகாரமான பிறகு, துருக்கி அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.
முடிவில் அவர் சவூதி அரேபியாவின் தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதனை சவூதி அரேபிய அரசும் சில நாள்களுக்கு பிறகு ஒப்புக் கொண்டது. சவூதி அரேபிய அரசை அமெரிக்காவிலிருந்து கஷோகி கடுமையாக விமர்சித்து வந்தார். அவரது கட்டுரைகள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அவ்வப்போது வெளியானது.
இந்த விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத சவூதி இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின்பேரில் உரிய நேரம் பார்த்து கஷோகி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இளவரசர் சல்மான் திட்டவட்டமாக மறுத்தார்.
கஷோகியின் சடலம் கூட கிடைக்காமல் மறைக்கப்பட்ட மிகக் கொடூரமான இந்தக் கொலைக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் கண்டனங்களை பதிவு செய்தன.
இந்நிலையில், ஆண்டுதோறும் அமெரிக்கா வெளியிடும் மனித உரிமை அறிக்கை கடந்த புதன்கிழமை வெளியானது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் சமர்ப்பித்த அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கஷோகி கொலை சம்பந்தமாக சந்தேகத்துக்குரிய 11 நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சவூதி அரேபிய அரசு தரப்பு வழக்குரைஞர் அலுவலகம் தெரிவித்தது. எனினும், மேலும் பல தகவல்கள் இன்னும் வெளிவராமல் உள்ளது. அவர்களின் பெயர்களைக் கூட இன்னும் வெளியிடவில்லை. வழக்கு விசாரணை தொடர்பான விரிவான அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com