Enable Javscript for better performance
பயங்கரவாதத்தின் மறுபெயர் மசூத் அஸார்!- Dinamani

சுடச்சுட

  

  பயங்கரவாதத்தின் மறுபெயர் மசூத் அஸார்!

  By DIN  |   Published on : 16th March 2019 12:44 AM  |   அ+அ அ-   |    |  

  masood  மசூத் அஸார் - இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பல பத்திரிகை, தொலைக்காட்சிகளில் அண்மையில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் இதுவாகவே உள்ளது. இந்தியாவுக்கு எதிரான மிகமோசமான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய கொடூர குற்றவாளியான மசூத் அஸார், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். 
  ஆனால், அவர் இப்போதும் பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஆடியோ வெளியிட்டு வருகிறார் என்பது மிகவும் கசப்பான உண்மை.
  தவறவிட்டது தவறு!
  பாதுகாப்பு விஷயத்தில் ஏற்படும் சிறிய குறைபாடு ஒரு நாட்டுக்கு எதிராக எவ்வளவு மோசமான பயங்கரவாத சேதங்களை உருவாக்கும் என்பதற்கு மசூத் அஸார் உதாரணம். பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அஸார், கடந்த 1994-ஆம் ஆண்டு போலியான அடையாளத்துடன் ஸ்ரீநகரில் பயங்கரவாதத்துக்கு ஆள் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நமது பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினார். அதன் பிறகு 1999ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கரவாதிகளால் காந்தகாருக்கு கடத்தப்பட்டபோது பிணைக் கைதிகளான பயணிகளை விடுவிப்பதற்காக, சிறையில் இருந்த மசூத் அஸார் வேறு வழியின்றி விடுதலை செய்யப்பட்டார். இதுவே, இந்தியாவுக்கு  இப்போது வரை பெரும் தலைவலியாகத் தொடர்ந்து வருகிறது. நமது வீரர்களிடம் பிடிபட்டபோதே அவரை கிள்ளி எறிந்திருந்தால், இத்தகைய பயங்கரவாத விஷ விருட்சம் உருவாவது தடுக்கப்பட்டிருக்கும்.

  பாகிஸ்தானே பக்கபலம்
   மசூத் அஸாரின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியாவின் முயற்சிகளை பாகிஸ்தான் தொடர்ந்து தடுத்து வருகிறது. அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த தங்களால் முடிந்த அளவுக்கு மசூத் அஸாருக்கு உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதை கொள்கையாகவே கொண்டுள்ளது பாகிஸ்தான்.  அண்மையில் தங்களிடம் பிடிபட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை, பல்வேறு நெருக்கடி காரணமாகவே பாகிஸ்தான் விடுவித்தது.

  தொடரும் தாக்குதல்கள்...
  பாகிஸ்தானில் 2000-ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பை தொடங்கிய மசூத் அஸார், நமது நாட்டுக்கு எதிராக மிகத்தீவிரமான பயங்கரவாதத்தை முன்னெடுத்தார். 2000-ஆம் ஆண்டில் காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி 5 ராணுவ வீரர்களைக் கொன்றனர் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள். 2001-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை வளாகத்தில் வெடிகுண்டு நிரப்பிய கார் மூலம் தாக்குதல்; இந்தியாவின் ஆன்மாவாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது, 2016-ஆம் ஆண்டு பதான்கோட் விமானப் படை தளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது என தாக்குதல் சம்பவங்கள் தொடர் கதையானது. இப்போது புல்வாமாவில் மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 40 சிஆர்பிஎஃப் வீரர்களை கொலை செய்ததுவரை சிறிதும், பெரிதுமாக மசூத் அஸாரின் பயங்கரவாத இயக்கம் நடத்தும் தாக்குதல்கள் இந்தியாவில் தொடர்ந்து பெரும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

  என்னதான் வேண்டும்...
  காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரித்து, அதனை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும்; அதைத் தொடர்ந்து இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஜிகாத் நடத்தி ஹிந்துக்களையும், முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரையும் அழிக்க வேண்டும் என்பதுதான் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முழுமுதற் கொள்கை. இதுதவிர பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதோரை ஒழிப்பதும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை விரட்டுவதும் அந்த அமைப்பின் அடுத்தகட்ட இலக்குகள்.

  பயங்கரவாத அழைப்பு
  ஜிகாதுக்காக (தீமைகளுக்கு எதிரான புனிதப் போர்) திருமணம் செய்து கொள்ளுங்கள், ஜிகாதுக்காக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், அதற்காகவே பணமும் சம்பாதியுங்கள். இந்தியா, அமெரிக்காவின் கொடுமைகளை ஒழிக்கும் வரை போரிடுங்கள்- இது கராச்சியில் ஒருமுறை தனது இயக்கத்தின் கொள்கையை விளக்கி மசூத் அஸார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. இந்தியாவில் ராணுவ வீரர்கள் உள்பட பலரது உயிரிழப்புக்கு காரணகர்த்தாவாக உள்ள மசூத் அஸார், இதுவரை ஆயுதம் ஏந்தியதாக தகவல் இல்லை. இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு இழுக்கும் வகையில் பேசுவதும், எழுதுவதும், பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவது, அல்-காய்தா, சோமாலியாவில் செயல்பட்ட அல்-இதாஹத் அல்-இஸ்லாமியா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகள்தான் மசூத் அஸாரின் பலம். ஆப்கானிஸ்தானில் 1980-ஆம் ஆண்டுகளில் சோவியத் படைகளுக்கும், முஜாகிதீன் பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட போரின்போது அப்பகுதியில் இருந்த மசூத் அஸார் காயமடைந்தார். அதன் பிறகு அவர் நேரடியாக ஆயுதத்தை தொடுவதில்லை. ஆனால், அவரால் ஆயுதம் ஏந்தி உயிர்விட்ட இளைஞர்கள் ஏராளம். 

  மரணமும், மர்மமும்
  50 வயதாகும் மசூத் அஸார் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்; சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார் என்று அண்மையில் தகவல் வெளியாகின. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் அவர் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி ஒப்புக் கொண்டார். வெளியே நடமாட முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.
  இந்நிலையில்தான்  மார்ச் 7-இல் மசூத் அஸாரின் ஆடியோ பதிவு ஒன்றை ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு வெளியிட்டது. அதில், நான் மரணமடைந்துவிட்டதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் நான் நலமுடன் இருக்கிறேன் என்று மசூத் அஸார் கூறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிராகவும், காஷ்மீர் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் ஒழியவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
   

  kattana sevai