சுடச்சுட

  

  இந்தியாவுடன் இணைந்து புதிய ராணுவ தொழில்நுட்ப மேம்பாடு: அமெரிக்கா பரிசீலனை

  By DIN  |   Published on : 17th March 2019 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவுடன் இணைந்து வானிலிருந்து செலுத்தக்கூடிய சிறிய வகை ஆளில்லா விமானம், இலகுரக ஆயுதங்கள் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
   இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் இந்திய ராணுவ தளவாட உற்பத்திப் பிரிவுச் செயலர் அஜய் குமார் பங்கேற்ற கூட்டத்தில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கொள்முதல் பிரிவு இணையமைச்சர் எல்லென் லார்ட் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
   இந்தியாவுடன் இணைந்து புதிய ராணுவ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அவற்றில் ஒன்று, வானிலிருந்தபடி விமானத்தின் மூலம் ஏவப்படும் சிறிய வகை ஆளில்லா விமானம் ஆகும். மிகவும் விலை குறைந்த அத்தகைய விமானங்கள், போர் விமானங்களுக்கு மிகச் சிறந்த பக்கபலமாக இருக்கும்.
   சிறிய வகை ஆளில்லா விமானங்களை பேரிடர் மீட்புப் பணிகள், எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகள், குகை சுரங்க ஆய்வுகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியும்.
   இந்த கூட்டுத் தயாரிப்பு திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் வரும் செப்டம்பர் மாதம் கையெழுத்திட திட்டமிட்டு வருகிறோம்.
   ராணுவ தளவாடத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதன் மூலம், இரு தரப்பினருமே பயனடைய முடியும். இதில் உருவாக்கப்படும் தளவாடங்களின் நன்மையை இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே அனுபவிக்க முடியும். இதன் மூலம், இரு நாடுகளுமே ராணுவ ரீதியில் வலிமை அடையும்.
   இதுதவிர, இலகுரக ஆயுதங்கள், சிறிய வகை ராணுவ தளவாடங்களை இந்தியாவுடன் இணைந்து உருவாக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
   ராணுவ தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமன்றி, விமானப் பராமரிப்புக்கான திறனை இணைந்து மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசித்து வருகிறோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai