சுடச்சுட

  

  நியூஸிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி மீது கொலை வழக்குப்பதிவு

  By  கிறைஸ்ட்சர்ச்,  |   Published on : 17th March 2019 02:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nz

  நியூஸிலாந்தில் மசூதிகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட வலதுசாரி பயங்கரவாதியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
   28 வயதான அந்த இளைஞர் மீது மேலும் பல புகார்கள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் பலியாகினர். 40 பேர் பலத்த காயமடைந்தனர்.
   இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதான வலதுசாரி பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். கைகள் கட்டப்பட்ட நிலையில், கைதிகளுக்கான மேல் அங்கியுடன் அவர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டார்.
   வழக்கு விசாரணையின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்ட நபர், தனக்கு ஜாமீன் கேட்கவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
   இதற்கிடையே, காவல்துறை நடத்திய விசாரணையில், தாக்குதலை நடத்திய பயங்கரவாதி மொத்தம் 5 துப்பாக்கிகளைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. அவை அனைத்துமே முறைப்படி துப்பாக்கிகளுக்கான உரிமங்களுடன் வாங்கப்பட்டுள்ளது என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
   அதில், அதிரடியான தாக்குதலை மேற்கொள்ளும் வகையில் அவர் சில மாற்றங்களைச் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
   இந்நிலையில், நியூஸிலாந்தில் தானியங்கி துப்பாக்கிகளை வாங்குவதற்கு தடை விதிக்கும் வகையில் துப்பாக்கி உரிமச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
   இமாம் கருத்து: கிறைஸ்ட்சர்ச் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான மசூதியின் இமாம் அப்துல் ஹலிம் கருத்து தெரிவிக்கையில், "இந்தப் படுகொலை காரணாக, நியூஸிலாந்து மீது முஸ்லிம் மக்கள் வைத்துள்ள அன்பு குறைந்துவிடவில்லை; நாங்கள் இன்னும் இந்நாட்டை நேசித்து வருகிறோம்.
   எனதுப் பிள்ளைகள் இங்குதான் வாழுகின்றனர். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பெரும்பான்மையான நியூஸிலாந்து மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவத்துள்ளனர்'' என்றார்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai