இந்தோனேஷியா: வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77-ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77-ஆக அதிகரித்துள்ளது.


இந்தோனேஷியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77-ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் சுடோபோ பூர்வோ நுக்ரோஹோ திங்கள்கிழமை கூறியதாவது:
கிழக்கு பப்புவா மாகாணத்தில் உள்ள சென்டானி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 77-ஆக அதிகரித்துள்ளது.
40-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்று தெரியாத காரணத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 5, 700-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  
அதில், பலர் பலத்த காயமடைந்திருந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.
இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தில் உயிர் தப்பிய 5 மாத குழந்தையை, அதன் தந்தையுடன் சேர்த்துவிட்டதாக  மீட்பு படையினர் தெரிவித்தனர்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான மழைக் காலத்தில் இந்தோனேஷியாவில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவில் கடந்த ஜனவரி மாதம்  ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com