சிரியா: ஐஎஸ் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்னும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பேகவுஸ் பகுதியை மீட்கத் தயாராகும் சிரியா ஜனநாயகப் படையினர்.
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பேகவுஸ் பகுதியை மீட்கத் தயாராகும் சிரியா ஜனநாயகப் படையினர்.


கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்னும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருப்பதாக சிரியா அரசு படை தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் சிரியா ஜனநாயக படையின் (எஸ்டிஎஃப்) செய்தித் தொடர்பாளர் முஸ்தபா அலி ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது: 
பயங்கரவாதிகளின் கடைசிப் புகலிடமான ஈராக் எல்லையையொட்டிய பேகவுஸ் என்ற சிறிய கிராமம் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இப்போது எஸ்டிஎஃப் படையின் முழு கவனமும் பேகவுஸ் கிராமத்தை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதிலேயே உள்ளது.
ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அவர்களின் பல இடங்களை எஸ்டிஎஃப் கைப்பற்றியுள்ளது. மேலும், ஆயுத கிடங்குகளும் அழிக்கப்பட்டுள்ளன. 
அமெரிக்க கூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதல் ஆதரவுடன் குர்து படைகள் முன்னேறியதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஐஎஸ் அமைப்பினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர் என்றார் அவர். 
எஸ்டிஎஃப்-பின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் கினோ கேப்ரியல் கூறியதாவது:
ஐஎஸ் ஆதிக்கத்துக்குள்பட்ட பகுதியில் சுமார் 5,000 பொதுமக்கள் வரை இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், சிரியா படைகள் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. அவர்களின் பிடியிலிருந்து ஏராளமானோர் தப்பி வருகின்றனர். இருப்பினும், கணிசமானோர் இன்னும் அங்கேயே தங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஐஎஸ்ஸுடனான போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதை இப்போதே கணிக்க இயலாது. இருப்பினும், அதற்கு இன்னும் பல நாள்கள் ஆகும் என்பதே எனது கணிப்பு. 
கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி முதல் அமெரிக்க ஆதரவுப் படைகளின் இடைவிடாத தாக்குதல் காரணமாக 30,000 ஐஎஸ் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சரணடைந்துள்ளனர்.
இதில், 5,000-க்கும் மேற்பட்டோர் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆவர். மேலும், ஐஎஸ் அமைப்பின் பிடியிலிருந்து கூடுதலாக 34,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். 
பேகவுஸ் தாக்குதலை தொடங்கியதற்கு பிறகு மட்டும் 1,300 ஐஎஸ் அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 520 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் சிரியாவின் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com