நியூஸி. துப்பாக்கிச்சூடு விவகாரம்: பயங்கரவாதி வீட்டில் காவல் துறையினர் சோதனை

நியூஸிலாந்தில் மசூதிகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிக்குச் சொந்தமான வீடுகளில், ஆஸ்திரேலிய காவல் துறையினர் சோதனை நடத்தினர்.


நியூஸிலாந்தில் மசூதிகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிக்குச் சொந்தமான வீடுகளில், ஆஸ்திரேலிய காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டன் டார்ரன்ட் என்ற பயங்கரவாதி, கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 மசூதிகளுக்குள் புகுந்து நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில், 5 இந்தியர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். 
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நியூஸிலாந்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அவருக்குச் சொந்தமான வீடுகளில் அந்நாட்டு காவல் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். 
இது தொடர்பாகக் காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நியூஸிலாந்தில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய நபருக்குச் சொந்தமான 2 வீடுகளில், நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுக் குழு, காலை 8.30 மணியளவில் சோதனை நடத்தியது. 
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நியூஸிலாந்து காவல் துறையினருக்கு உதவும் வகையில், ஆவணம் ஏதும் கிடைக்கிறதா? என்ற நோக்கில், இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பயங்கரவாதியின் குடும்பத்தினர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குடும்பத்தினர் வருத்தம்: துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பயங்கரவாதி டார்ரன்ட்டின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக அவருடைய உறவினர்கள் கூறுகையில், எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், இப்படியொரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
புதிய விதிகள்: மசூதிகளில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாட்டு விதிகளை வலுப்படுத்தும் மசோதாவுக்கு நியூஸிலாந்து அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. 
இது தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பாகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. 
புதிய விதிகள் தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த திங்கள்கிழமை (மார்ச் 25) அமைச்சரவை முன் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com