போர்க் குற்ற விசாரணைக்கு தயார்: இலங்கை ராணுவம்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது, ராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, எந்தவிதமான விசாரணையையும் ஏற்பதற்கு தயாராக இருப்பதாக


இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது, ராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, எந்தவிதமான விசாரணையையும் ஏற்பதற்கு தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், அப்போதைய இலங்கை அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இறுதிக்கட்ட போரின்போது, இலங்கை ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 
இதுதொடர்பாக, சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த 2014-ஆம் ஆண்டில், இலங்கையில் இரு தரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்ய இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்தது. அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட அம்சங்களை நிறைவேற்ற இலங்கை அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும், சிறிது அவகாசம் அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கோரியுள்ளது.
இந்நிலையில், இலங்கை ராணுவத்தின் துணை தளபதி மகேஷ் செனநாயகே, வெலிகமாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
நாங்கள் எந்தவித விசாரணைக்கும் அஞ்சவில்லை. ஏனெனில், நாங்கள் எந்தவொரு குற்றமும் செய்யவில்லை. எந்தப் போராக இருந்தாலும், அதில் பொதுமக்கள் உயிரிழப்பது இருக்கும். பொதுமக்களின் உயிரிழப்பு இல்லாமல், எந்தப் போரும் இருக்காது. இது, கடினமான உண்மை. அதற்காக, நாங்கள் மக்களை வேண்டுமென்றே கொன்றதாகக் கருதிவிடக் கூடாது.
கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைவுபடுத்த வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும்.
ராணுவமும், விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சர்வதேச அளவிலான விசாரணை நடத்தத் தேவையில்லை. இலங்கை நீதித் துறையே விசாரித்து தீர்ப்பளிக்க முடியும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com