அமெரிக்கா: மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய அமெரிக்க பெண் பதவியேற்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்திய அமெரிக்க பெண் நியோமி ராவ்(45) பதவியேற்றார்.
அமெரிக்கா: மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய அமெரிக்க பெண் பதவியேற்பு


அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, இந்திய அமெரிக்க பெண் நியோமி ராவ்(45) பதவியேற்றார்.
அமெரிக்காவில் உள்ள மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றங்கள், அந்நாட்டு உச்சநீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக அதிகாரம் பெற்ற நீதிமன்றங்களாகும். இத்தகைய  நீதிமன்ற நீதிபதியாக இந்திய அமெரிக்கர் பதவியேற்பது 2-ஆவது முறையாகும்.
கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த பிரெட் கவனா, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து காலியாக இருந்த  நீதிபதி பதவிக்கு நியோமி ராவை, அதிபர் டிரம்ப் கடந்த நவம்பர் மாதம் பரிந்துரைத்தார். அந்த பரிந்துரைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. 
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், உச்சநீதிமன்ற நீதிபதி கிளாரென்ஸ் தாமஸ் முன்னிலையில், நியோமி ராவ் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட பல நாடாளுமன்ற எம்.பி.க்கள் கலந்து கொண்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இந்திய தம்பதிக்கு பிறந்த நியோமி ராவ், அங்குள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். சிறிது காலம் சட்டப் பேராசிரியராக பணியாற்றிய இவர், அரசின் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். அமெரிக்காவின் தகவல் மற்றும் ஒழுங்குமுறை துறை நிர்வாகத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக அதிபர் டிரம்ப்பின் பாராட்டைப் பெற்றவர். 
அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருந்தபோது, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு, இந்திய அமெரிக்கர் ஸ்ரீநிவாசன் முதல்முறையாக நியமிக்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக 2-ஆவது நபராக நியோமி ராவ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com