ஐ.எஸ். சாம்ராஜ்யம் அடியோடு ஒழிப்பு!

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வசம் இருந்த கடைசி நகரமான பேகவுûஸ அந்த நாட்டு குர்துப் படையினர் மீட்டனர். இதையடுத்து, ஐ.எஸ். சாம்ராஜ்யம் முழுமையாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். சாம்ராஜ்யம் அடியோடு ஒழிப்பு!

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வசம் இருந்த கடைசி நகரமான பேகவுûஸ அந்த நாட்டு குர்துப் படையினர் மீட்டனர். இதையடுத்து, ஐ.எஸ். சாம்ராஜ்யம் முழுமையாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் சிரியாவிலும், இராக்கிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள், அங்கு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைத்துள்ளதாக அறிவித்தனர். மேலும், அந்த சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகளும், ரஷியாவும் தனித் தனியாக வான்வழித் தாக்குதல் நடத்தின. அமெரிக்க உதவியுடன் சிரியா கிளர்ச்சியாளர்கள் மற்றும் குர்து படையினரும், ரஷிய உதவியுடன் அதிபர் அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படைகளும் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த பகுதிகளை ஒவ்வொன்றாக மீட்டன.
இராக்கிலும், அமெரிக்க உதவியுடன் அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்டனர்.
இந்தச் சூழலில், ஐ.எஸ். வசமிருந்த கடைசி பகுதியையும் மீட்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை குர்து படையினர் ஒரு மாத காலமாக மேற்கொண்டனர். அதையடுத்து, ஐ.எஸ். பயங்கரவாதிகள் பேகவுஸ் நகரிக்குள் முடக்கப்பட்டனர்.
இதற்கிடையே, குர்து படையினர் ஏற்படுத்தித் தந்த மனிதாபிமான வழித் தடத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவர்களிடம் சரணடைந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் பேகவுஸ் நகரிலிருந்து வெளியேறி, தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பேகவுஸ் நகருக்குள் முன்னேறிச் சென்றுகொண்டிருந்த குர்து படையினர், அந்த நகரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகவும், அதன் மூலம் ஐ.எஸ். சாம்ராஜ்யம் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டதாகவும் சனிக்கிழமை அறிவித்தனர்.
தனது கொடூர நடவடிக்கைகளால் உலகையே நடுங்க வைத்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.

ஐ.எஸ். கைதிகளை திரும்பப் பெற வேண்டும்!

ஐ.எஸ். பயங்கரவாதிகளுடனான இறுதிக் கட்டப் போர் நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பயங்கரவாதிகளையும், தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்களது குடும்பத்தினரையும் அவர்களது சொந்த நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குர்து படையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஐ.எஸ். சித்தாந்தத்தில் வளர்க்கப்பட்ட குழந்தைகளால் சிரியாவின் எதிர்காலத்துக்கு ஆபத்து நிலவுவதாகவும், அத்தனை பேரையும் முகாமில் வைத்து பராமரிக்க தங்களிடம் வசதி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது குர்து முகாம்களில் சிரியா, இராக் அல்லாத 54 நாடுகளைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com