மாலி: பெண்கள், குழந்தைகள் உள்பட 134 பேர் படுகொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் டோகோன் இனக் குழுவைச் சேர்ந்த ஆயுதப் படையினர், மற்றொரு இனக் குழு மீது கடந்த சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 134 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் டோகோன் இனக் குழுவைச் சேர்ந்த ஆயுதப் படையினர், மற்றொரு இனக் குழு மீது கடந்த சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 134 பேர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய மாலியின் ஒகோசோகு கிராமத்தில் வசிக்கும் புலானி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மீது, டோகோன் இனத்தைச் சேர்ந்த ஆயுதப் படையினர் அதிகாலையில்  தாக்குதல் நிகழ்த்தினர். துப்பாக்கியால் சுட்டும், வாளால் வெட்டியும் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 134 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஒகோசோகு கிராமத்தின் தலைவரும், அவரது பேரக் குழந்தைகளும் உயிரிழந்தனர் என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
பணி நீக்கம்:  படுகொலை சம்பவத்தை அடுத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதாகக் கூறி மாலி ராணுவத்தின் உயரதிகாரிகளை அந்நாட்டு அரசு பணி நீக்கம் செய்துள்ளது. ராணுவம் மற்றும் விமானப் படையின் மூத்த தளபதிகள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய மாலியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதலாக இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்து வருவது, புலானி மற்றும் டோகோன் சமூகத்தினரிடையேயான உறவில் மோதலை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய ஜிகாதிகளுக்கு புலானி சமூகத்தினர் ஆதரவளிப்பதாக டோகோன் சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மறுபுறம், இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்கும் மாலி ராணுவத்தின் முயற்சிக்கு டோகோன் சமூகத்தினர் ஆதரவளிப்பதாக புலானி சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். 
ஐ.நா. கவலை:  மாலியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 134 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com