அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை: அட்டர்னி ஜெனரல் தகவல்

அமெரிக்காவில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு உதவும் வகையில், ரஷியா தலையிட்டதற்கான
கலிபோர்னியா மாகாணம், பாம்பீச் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
கலிபோர்னியா மாகாணம், பாம்பீச் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.


அமெரிக்காவில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு உதவும் வகையில், ரஷியா தலையிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று சிறப்பு விசாரணை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் வகையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் மற்றும் பிரசார அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட கணினிகளில், இணையதளம் மூலம் ரஷியா ஊடுருவியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், ஹிலாரிக்கு எதிரான கருத்துகளை வாக்காளர்களிடையே உருவாக்க, சமூக வலைதளங்களில் ஊடுருவி, ரஷியா 
பதிவுகளை இட்டதாகவும் கூறப்பட்டது.
 இந்த விவகாரத்தில், டிரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும், ரஷிய அதிகாரிகளுக்கும் இடையே ரகசியத் தொடர்பு இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, புலனாய்வுத் துறையின் (எஃப்.பி.ஐ.) முன்னாள் இயக்குநரும், வெள்ளை மாளிகை சிறப்பு விசாரணை அதிகாரியுமான ராபர்ட் முல்லரின் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசாரணையின் இறுதி அறிக்கையை அட்டர்னி ஜெனரல் வில்லியம் பாரிடம், முல்லர் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார்.
முல்லரின் அறிக்கையை ஆராய்ந்த வில்லியம் பார்,  இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
முல்லர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை நாங்கள் முழுமையாக ஆராய்ந்தோம். அதில், 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், ரஷியாவின் தலையீடு இருந்ததற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறு செய்தார் என்று கூறுவதற்கான ஆதாரங்கள் பெறப்படவில்லை. இதன்மூலம், அமெரிக்காவின் நீதிக்கு டிரம்ப் குந்தகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
விசாரணை அபத்தமானது
விசாரணை அறிக்கை முடிவு குறித்து, அதிபர் டிரம்ப் கூறுகையில், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நமது நாடு உள்பட்டிருப்பது, மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தப் பிரச்னையின் ஒருபக்கத்தின் மீது மட்டுமே பெரும்பாலானோர் கவனம் செலுத்தினர். மறுபுறம் நிகழ்ந்தவை குறித்து, யாரும் சிந்திக்கவில்லை. நீண்ட நாள்களாக நடைபெற்ற இந்தப் பிரச்னையால், பலரது மனம் காயமடைந்துள்ளது. இந்த விசாரணை மிகவும் அபத்தமானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com