ஹமாஸ் அமைப்பு ராக்கெட் வீச்சில் 7 பேர் காயம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்

காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர்.இதற்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
ஹமாஸ் அமைப்பு ராக்கெட் வீச்சில் 7 பேர் காயம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்


காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர்.இதற்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதாவது:
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள  காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி திங்கள்கிழமை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வீடு ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது.  3 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் தீக்காயமடைந்தனர். காயமடைந்த 3 சிறுவர்களில் 6 மாத குழந்தையும் ஒன்று. காயமடைந்தவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
காயமடைந்தவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,  இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் நடத்திய ராக்கெட் தாக்குதல் கிரிமினல் குற்றத்துக்கு இணையானது. இதற்கு, தக்க பதிலடி தரப்படும். இந்த தாக்குதல் சம்பவத்தை மிகவும் நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது. எனவே, எனது அமெரிக்க பயண திட்டத்தை பாதியில் ரத்து செய்து விட்டு உடனடியாக நாடு திரும்பவுள்ளேன் என்றார்.
இஸ்ரேலில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாலஸ்தீனத்தின் இந்த ராக்கெட் வீச்சு இருநாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
 ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் தனது கடுமையான கண்டனத்தை உடனடியாக பதிவு செய்த  நிலையில், காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இதுகுறித்து  உடனடியாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ஹமாஸ் அமைப்பு மற்றுமொரு தாக்குலை நிகழ்த்தியுள்ளது . இதற்கு முன்பாக, மார்ச் 14-ஆம் தேதி காஸா பகுதியிலிருந்து இரண்டு ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டது.
 ஆனால், அதிருஷ்டவசமாக அப்போது யாருக்கும் காயமோ சேதமோ ஏற்படவில்லை. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இதற்கு உடனடி பதிலடி தரும் விதமாக 100 ஹமாஸ் நிலைகளை குறிவைத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களைக் கொண்டு காஸா பகுதியில் தாக்குதலை நடத்தியது. இதில், 4 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com