காஸா பகுதி மீது இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதலில் தகர்ந்த கட்டடம்.
காஸா பகுதி மீது இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதலில் தகர்ந்த கட்டடம்.

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி: ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திங்கள்கிழமை நடத்திய ஏவுகணைத்தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹமாஸ் நிலைகள் மீது தங்களது விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது


இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திங்கள்கிழமை நடத்திய ஏவுகணைத்தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹமாஸ் நிலைகள் மீது தங்களது விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஸா பகுதியிலுள்ள அந்த அமைப்பின் 15 ராணுவ நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹமாஸ் மட்டுமன்றி சிறிய பயங்கரவாதக் குழுக்களின் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் அலுவலகக் கட்டடமும் தாக்கி அழிக்கப்பட்டது. ஹமாஸின் ராணுவக் கூட்டங்களை நடத்துவதற்கு அந்தக் கட்டடம் பயன்படுத்தப்பட்டது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
முன்னதாக, காஸா சிட்டியில் ஹமாஸ் ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைமையகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அடுக்கு மாடிக் கட்டடத்தை இஸ்ரேல் விமானம் குண்டு வீசி தரைமட்டமாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரு கட்டடங்களிலும் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. தாக்குதலுக்கு முன்னர் அந்த கட்டடங்களில் இருந்தவர்கள் தப்பிச் செல்வதற்கு வசதியாக, இஸ்ரேல் விமானங்கள் எச்சரிக்கை குண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்ததாகத் தெரிவித்தது.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு முன்னரே ஹமாஸ் தலைவர்கள் பாதுகாப்பான இடங்களில் தலைமறைவாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்கும், காஸாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே சிறிது காலமாக அமைதி நிலவி வந்த சூழலில், யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் திங்கள்கிழமை திடீர் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இஸ்ரேலை நோக்கி 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறி ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டதாகவும், எஞ்சியவை திறந்த வெளியில் விழுந்ததாகவும் அவர்கள் கூறினர்.
இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் அமைப்பினரின் இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தெற்குப்  பகுதி உஷார் நிலை அதிகரிக்கப்பட்டது. பொதுமக்களுக்கான பதுங்கு குழிகள் திறக்கப்பட்டதுடன், விளையாட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.
அமெரிக்க சுற்றுப் பயணத்திலிருந்து செவ்வாய்க்கிழமை நாடு திரும்பிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த புதிய பதற்றம், சர்வதேச நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com