பிரெக்ஸிட் சிக்கலைத் தீர்க்க புதிய முயற்சி: மசோதா அறிமுக அதிகாரத்தை அரசிடமிருந்து கைப்பற்றியது நாடாளுமன்றம்

பிரெக்ஸிட் சிக்கலைத் தீர்க்க புதிய முயற்சி: மசோதா அறிமுக அதிகாரத்தை அரசிடமிருந்து கைப்பற்றியது நாடாளுமன்றம்

மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரத்தை பிரிட்டன் அரசிடமிருந்து அந்த நாட்டு நாடாளுமன்றம் கைப்பற்றியது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:


மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரத்தை பிரிட்டன் அரசிடமிருந்து அந்த நாட்டு நாடாளுமன்றம் கைப்பற்றியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரெக்ஸிட் விவகாரத்தில் அரசுக்கும், எம்.பி.க்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரெக்ஸிட் நடவடிக்கை முடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், அந்த முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக நாடாளுமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரத்தை தாங்களே எடுத்துக் கொள்வதற்கான தீர்மானத்தை எம்.பி.க்கள் திங்கள்கிழமை  நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து, மசோதாக்களை அறிமுகம் செய்யும் அதிகாரம் அரசிடமிருந்து நாடாளுமன்றத்துக்கு கைமாறியது.
பிரெக்ஸிட் தொடர்பான பல்வேறு தீர்வுகளை அலசி ஆராய்ந்து, அதில் சிறந்ததைத் தேர்வு செய்வதற்கான முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
பிரெக்ஸிட்டுப் பிறகும் ஐரோப்பிய யூனியனுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்பைப் பேணுவது, பிரெக்ஸிட்டையே ரத்து செய்வது போன்ற தீர்வுகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
3 அமைச்சர்கள் ராஜிநாமா: இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக, வெளியுறவுத் துறை இணையமைச்சர் அலிஸ்டேர் பர்ட், சுகாதாரத் துறை இணையமைச்சர் ஸ்டீவ் பிரைன், வர்த்தகத் துறை இணையமைச்சர் ரிச்சர்ட் ஹாரிங்டன் ஆகியோர் ராஜிநாமா செய்தனர்.
எம்.பி.க்களின் இந்த நடவடிக்கை குறித்து பிரிட்டன் அரசு அதிருப்தி தெரிவித்தாலும், இதனால் பிரெக்ஸிட் விவகாரத்தில் நீடித்து வரும் முட்டுக்கட்டை நீங்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்ஸிட்) தொடர்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், பிரெக்ஸிட்டுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த மாதம் 29-ஆம் தேதியுடன் யூனியனிலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்தது.
அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய வர்த்தக விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற்கொண்டனர்.
எனினும், அந்த ஒப்பந்தம் பிரிட்டன் நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் நாடாளுமன்றம் இரு முறை நிராகரித்தது.
அதையடுத்து, பிரெக்ஸிட் காலக்கெடுவை மே மாதம் 22-ஆம் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்தது.
எனினும், பிரெக்ஸிட் தொடர்பான ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் ஒரு வாரத்துக்குள் ஏற்க வேண்டும்; அல்லது ஐரோப்பி யூனியனிலேயே தொடர்வது குறித்த முடிவை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் சம்மதிக்க வேண்டும் என்று பிரிட்டனுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த இரண்டு நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை பிரிட்டன் பூர்த்தி செய்யாவிட்டால், எந்தவித ஒப்பந்தமும் இல்லாமலேயே தங்களது அமைப்பிலிருந்து பிரிட்டன் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியேற்றப்படும் என்று ஐரோப்பிய யூனியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அவ்வாறு வெளியேற்றப்பட்டால், அது பிரிட்டன் தொழில்துறையை கடுமையாக பாதிக்கும்.
இந்த இக்கட்டான சூழலில், மசோதாக்களை அறிமுகப்படுத்தும் அதிகாரத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் கையிலெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com