இலங்கை: தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.


இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி, ஈஸ்டர் பண்டிகையின்போது 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 10 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ. எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற போதிலும், உள்ளூர் பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.
இந்த சூழலில் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், தி ஜமாத்தே மில்லத்து இப்ராஹிம், விலாயத் அஸ் சேலானி என்ற 3 பயங்கரவாத அமைப்புகளையும் தடை செய்வதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா திங்கள்கிழமை அறிவித்தார். அத்துடன் அடுத்த அறிவிப்பு வரும் வரை, நாட்டில் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறீசேனா தெரிவித்தார்.
சுமார் 2.1 கோடி மக்கள் வாழும் இலங்கையில், சிங்களர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். 10 சதவீத முஸ்லிம் மக்களும், 7 சதவீத கிறிஸ்துவ மக்களும் அங்கு வாழ்ந்து வருகின்றனர். 
இந்நிலையில், தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலால் மக்களிடையே வகுப்புவாத கலவரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் வன்முறைகளை கட்டுப்படுத்த இலங்கையில் நாடு முழுவதும் திங்கள்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. 
ஊரடங்கு உத்தரவு தளர்வு: இலங்கையில் திங்கள்கிழமை இரவு  நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வடமேற்கு மாகாணம் தவிர மற்ற இடங்களில் செவ்வாய்க்கிழமை தளர்த்தப்பட்டது. 
இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறையில் முஸ்லிம் ஒருவர் திங்கள்கிழமை கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அமைச்சர் ஒருவர் கூறுகையில், முஸ்லிம்கள் நடத்தி வரும் கடைகளை சிங்களர்கள் அடித்து நொறுக்கியதுடன், அவர்களது வாகனங்களை தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமன்றி, ராஃப் ஹக்கீம் என்பவர் மீது  சிங்களர்கள் நடத்திய தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் வடமேற்கு மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது என்றார். 
20 பேர் கைது: வன்முறை தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,கலவரத்தில் ஈடுபட்டதாக, 15-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. அவர்களுக்கு, ஜாமீனில் வெளிவர இயலாதபடி, 10 ஆண்டுகள் சிறை தண்டனை கோர அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட 9 பேர்களில் ஒருவரான அப்துல் லத்தீப் முகமது ஜமால்(37), லண்டனில் பயிலும்போது, பாகிஸ்தான் வம்சாவளி பயங்கரவாத பரப்புரையாளர் அன்ஜும் செளதரியை சந்தித்து பயிற்சி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி, ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் பல பயங்கரவாத அமைப்புகளிடம் அப்துல் லத்தீப் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com