புதின், ஷி ஜின்பிங்குடன் ஜூனில் சந்திப்பு: டிரம்ப் அறிவிப்பு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் அடுத்த மாதம் (ஜூன்) நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரம்ஜானையொட்டி, வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில்  இஃப்தார் விருந்தளிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
ரம்ஜானையொட்டி, வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில்  இஃப்தார் விருந்தளிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்.


ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் அடுத்த மாதம் (ஜூன்) நேரில் சந்தித்துப் பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜப்பானில் அடுத்த மாதம் ஜி20 நாடுகளின் மாநாடு நடக்கவிருக்கிறது.
அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் செல்லும் நான், அங்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் சந்தித்துப் பேசுவேன்.
சீன அதிபருடனான எனது பேச்சுவார்த்தைக்கு நல்ல பலன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வரை சீனாவிடமிருந்து 10 சென்ட் கூட கூடுதல் வரியாக அமெரிக்கா வசூலிக்கவில்லை. ஆனால் இப்போது அவர்களது பொருள்கள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதிப்பதன் மூலம் கோடிக்கணக்கான டாலரை வசூலித்து வருகிறோம். நாங்கள் முடிவு செய்தால், சீனாவிடமிருந்து தற்போது வசூலிக்கும் தொகை மட்டுமன்றி, மேலும் 32,500 கோடி டாலர் (ரூ.22.8 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்போம்.
இவ்வளவு பெரிய தொகையை இதற்கு முந்தைய அரசுகள் எதுவும் சீனாவிடமிருந்து வசூலித்ததே இல்லை.
இத்தகைய சூழலில் நானும், சீன அதிபரும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம்.
புதினுடன் சந்திப்பு: ஜி20 மாநாட்டினிடையே ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.
ரஷியாவுக்கு எதிராக இதுவரை எந்தவொரு அரசும் எனது அரசைப் போன்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததில்லை.
எனினும், புதினைச் சந்தித்து பேசுவதன் மூலம், அந்த நாட்டுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்தவிருக்கிறோம். 
ரஷியாவுடன் இணக்கமாகச் செல்வதும் புத்திசாலித்தனமானதுதான் என்றார் டிரம்ப்.
சீனப் பொருள்கள் மீது அதிபர் டிரம்ப் அடுக்கடுக்காக கூடுதல் வரிகளை அறிவித்து வருவதால் அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. மேலும், வெனிசூலா உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் ரஷியாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
இந்தச் சூழலில், ரஷிய அதிபரையும், சீன அதிபரையும் டொனால்ட் டிரம்ப் நேரில் சந்தித்துப் பேச்சுவார்தை நடத்தவிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com