எண்ணெய் குழாய்கள் மீதான தாக்குதல்: ஈரான் மீது சவூதி அரேபியா குற்றச்சாட்டு

தங்கள் நாட்டு எண்ணெய்க் குழாய்களில் தாக்குதல் நடத்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உத்தரவிட்டதாக சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.
சனா நகரிலுள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில், சவூதி கூட்டுப் படை விமானத் தாக்குதலால் எழும் புகை மண்டலம்.
சனா நகரிலுள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில், சவூதி கூட்டுப் படை விமானத் தாக்குதலால் எழும் புகை மண்டலம்.


தங்கள் நாட்டு எண்ணெய்க் குழாய்களில் தாக்குதல் நடத்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உத்தரவிட்டதாக சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் காலித் பின் சல்மான் கூறியதாவது:
சவூதி அரேபிய எண்ணெய்க் குழாய்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல், அவர்களை எங்களுக்கு எதிரான கருவியாக ஈரான் பயன்படுத்துவதைக் காட்டுகிறது. அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஈரான் அரசுதான் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் நிறைவேற்றியிருக்கின்றனர் என்றார் அவர்.
யேமனில் வான்வழித் தாக்குதல்: யேமன் தலைநகர் சனாவில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து யேமன் மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது: சனாவில் சவூதி கூட்டுப்படை விமானங்கள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தின. அந்தத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். விமானத் தாக்குதலில் காயமடைந்த அனைவரும் சனா நகரிலுள்ள குடியரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சவூதி அரேபிய கூட்டுப் படை விமானங்கள் 19 இடங்களில் குண்டு வீசியதாகவும், அவற்றில் சனாவில் மட்டும் 11 இடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் கிளர்ச்சியாளர்களுக்குச் சொந்தமான அல்-மாசிரா தொலைக்காட்சி தெரிவித்தது.
அமெரிக்காவின் அச்சுறுத்தலை ஏற்க முடியாது
 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினாலும், ஈரான் மிகவும் பொறுமையாகவே உள்ளது. ஆனால் அமெரிக்கா அளிக்கும் அச்சுறுத்தல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.


ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த ஆண்டு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 
இந்நிலையில்  அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், அச்சுறுத்தல்கள் அதிகரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷரீஃப் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள ஷரீஃப், அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா வெளியேறியது. ஆனாலும், நாங்கள் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி செயல்பட்டு வருகிறோம். ஈரானின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினால் உண்மை தெரிய வரும். அனைத்து செயல்களையும் ஈரான் பொறுமையாக கையாண்டு வருகிறது. ஆனால் நாங்கள் செய்யாத குற்றங்களுக்கு அமெரிக்கா எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அதிகரித்து வருகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com